Close
நவம்பர் 22, 2024 5:53 மணி

பொங்கல் பரிசுடன் கரும்பையும் சேர்த்துக் கொடுங்கள்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் ஜி.எஸ். தனபதி

பொங்கல் பரிசுத் தொகையுடன் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இவற்றுடன் சேர்த்து வழக்கம்போல் கரும்பையும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து  இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ். தனபதி வெளியிட்டுள்ள அறிக்கை:  பொங்கல் பரிசுத்தொகை அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் விளைவித்த பொங்கல் கரும்பை அரசு சார்பில் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு கரும்பு வழங்கப் பட்டது. இந்த ஆண்டு அதுபோன்று கரும்பு வழங்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பெருமளவில் பொங்கல் கரும்பை உற்பத்தி செய்துள்ளார்கள்.

தற்போது அப்படி கரும்பு வழங்குவதில்லை என்ற நிலை உருவாகி இருப்பதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், உற்பத்தி செய்த கரும்பை என்ன செய்வது என்ற கவலையோடும் இருக்கிறார்கள்.

ஆகவே, எப்பொழுதும் போல் பொங்கல் பண்டிகையை ஒட்டி அந்தந்த மாவட்டத்தின் தேவைக்கு அந்தந்த மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கினால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள், விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும். அதனால் பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக முதல்வரை  கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் ஜி.எஸ். தனபதி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top