Close
நவம்பர் 22, 2024 4:57 மணி

எண்ணூரில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன வெளிமாநில இளைஞர்கள்

சென்னை

சென்னை மணலி அருகே கடல் அலையில் 4 பேர் இழுத்துச்செல்லப்பட்டனர்

சென்னை, எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் அருகே ஞாயிற்றுக் கிழமை கடலில் குளித்துக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மணலி புதுநகர் அருகே  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 20-க்கும் மேற்பட்டோர் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையில் குளித்து விளையாடி உள்ளனர்.  அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி கடலில் குளித்துக் கொண்டிருந்த பலரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அனைவரையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தகீம் (21)வாசிம் (23) பூர்கான் (28), இப்ராஹிம் (25) ஆகிய நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி விட்டனர்.
இதில் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த கடற்கரை பகுதிக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
எண்ணூர் சரக காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் வடசென்னை கடற்கரை பகுதிக்கு உள்பட்ட எண்ணூர் முகத்துவாரம், தாழங்குப்பம், சிவகாமி நகர், பாரதியார் நகர், எர்ணாவூர் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top