புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் திருக்கோவிலின் முன்புறம் உள்ள பழமையான அரசமரத்தில் திங்கள்கிழமை காலையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
இக்கோவில் கி.பி. 1071-1123 இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சந்நிதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோவில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. கோவிலின் எதிர் புறம் பழமையான அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தில் உள்ள விநாயகர் வீற்றிருக்கிறார். நாகர் சிலைகளும் உள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலாவது இந்த அரசமரத்த டியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபட்ட பிறகே சாந்தநாதர் கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த மரத்தின் அடிப்பாகம் குகை போல அரித்து பட்டுப்போனது. இந்நிலையில், இங்கு ஏற்றி வைக்கப்பட்ட கற்பூரதீபம் அப்பகுதியில் பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் அளித்த தகவலின்பேரில் புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மிகவும் பழமையான மரமாகவும் அடிப்பாகம் பட்டுப் போய்க்கொண்டிருப்பதாலும், இந்த மரத்தடியில் உள்ள விநாயகருக்கு கற்பூரம் தீபம் ஏற்ற மாற்று ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து, இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க முன் வரவேண்டும் என்பதே பக்தர்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.