7 தமிழர்கள் விடுதலைக்கான போராட்ட வழக்கில் தஞ்சாவூரில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி மற்றும் தமிழ் தேச அமைப்புகள் ஒன்று சேர்ந்து கிழக்கு காவல்துறையினரிடம் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு, கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைதயடுத்து, அந்த இடத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 26.07.2019 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பி.முத்துகுமரன், தமிழர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராஜேந்திரன், தமிழ் தேச மக்கள் முன்னனி மாவட்டச் செயலாளர் அருண் சோரி, தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ..திருநாவுக்கரசு ஆகிய ஏழு பேர் மீது கடந்த மூன்றாண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற வழக்கில் (26.12.2022) தஞ்சை நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் ஆஜராகினர். குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். வழக்கில் விடுதலை பெற்ற ஏழு பேர் வெளியே வந்த பின்பு பத்திரிக்கையாளர்களிடம் தமிழர் தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் அயனாவரம் சி. முருகேசன் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் காவல்துறையின் பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த தீர்ப்பு வந்துள்ளது, நாங்கள் விடுதலை பெற்றுள்ளோம் , பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டு ஏழு பேர் விடுதலைக்காக நாங்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே போராடி வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது விடுதலை பெற்ற சாந்தன்,முருகன், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு தமிழர்களும் திருச்சியில் இலங்கைத் தமிழர் முகாமில் வைக்கப்பட்டுள் ளனர்.
இதன் மூலம் அவர்கள் விடுதலை பெற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுதந்திரமாக அவர்கள் வாழ முடியவில்லை. திருச்சி இலங்கை. தமிழர் முகாமில் உள்ள சாந்தன்,முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களும் அவரவர் விரும்பிய இடங்களில் வாழ்வதற்கு உரிய உதவிகளை தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் செய்த தர வேண்டும்.
தங்களது இறுதி காலத்திலாவது அவர்கள் முகிழ்சிகரமான வாழ்க்கையை துவக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்களது வழக்கில் வாதாடி வந்த வழக்கறிஞர் பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கு நாங்கள் வரும்போதெல்லாம் உடன் வந்து உற்சாகப்படுத்திய அனைத்து கட்சி, இயக்க நிர்வாகிகளுக்கும் எங்களது சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அயனாபுரம் சி.முருகேசன் தெரிவித்தார்.