Close
நவம்பர் 22, 2024 5:56 மணி

டிசம்பர் 27… “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட நாள் இன்று

தமிழ் ஆட்சி மொழி

தமிழ் மொழி ஆட்சி மொழியான நாள் (டிச.27) இன்று

வரலாற்றில் இன்று… தமிழகத்தில், டிசம்பர் 27 –ஆம் தேதி, 1956 -ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட நாள்  இன்று.

பொதுவாக, மாநிலத்தின் அலுவலக நடைமுறைகளைச் செயல்படுத்த மாநில அரசால் சட்டப்படி அனுமதிக்கப் பட்ட மொழியே ஆட்சி மொழியாகும். அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும்.

அதன்படி தமிழகத்தில், 1956 -ஆம் ஆண்டு டிசம்பர் 27 -ஆம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் (அப்போது சென்னை மாகாணம்) தமிழ் தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 -இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்டம் 1957-ஆம் ஆண்டு ஜனவரி 23 -ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவுப்படி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் தான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசால், ஆட்சிமொழிக் குழு 1957-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் விதிகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் போன்றவை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றும் செயல்கள் உருவாகி.ன இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றப்பட்டு வந்தது.

பின்னர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங் களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆட்சி மொழிக் குழு ஒன்றை உருவாக்கியது. 1957 -ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையை 1971 -ஆம் ஆண்டில் தமிழக அரசு ஏற்படுத்தியது. தமிழ் வளர்ச்சி இயக்குநரை துறைத் தலைமை அலுவலராகக் கொண்டு செயல்படும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சென்னையில் அமைந்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாய பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகும். இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மொழித் திட்டத்தின் அடிப்படையில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தால் ஊக்கப் பரிசுகளும், கேடயமும் வழங்கப்படுகின்றன.

கேடயம் வழங்குதல் : ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் துறைத் தலைமை அலுவலகம் ஒன்றையும், தன்னாட்சி நிறுவனங்களின் தலைமை அலுவலகம் ஒன்றையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒன்றையும், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள மாவட்ட நிலை அலுவலகம் ஒன்றையும் ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவற்றிற்கு இத்திட்டத்தின்கீழ்க் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன.

பணப்பரிசு வழங்குதல்: தமிழில் சிறந்த குறிப்புகளையும், வரைவுகளையும் எழுதும் பணியாளர்கள் ஆண்டுதோறும் தெரிவுசெய்யப் பெற்றுப் பணப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப் பெறுகின்றனர். முதற் பரிசு ரூ.3000/-, இரண்டாம் பரிசு ரூ.2000/-, மூன்றாம் பரிசு ரூ.1000/- எனும் அளவில் வழங்கப் பெறுகிறது.

இத்திட்டப் பரிசுகள் பரவலாக அமையும் வகையில் தலைமைச் செயலகப் பணியாளர்கள், துறைத்தலைமை அலுவலகங்களின் பணியாளர்கள் என்ற வகையில் மொத்தம் ஒன்பது பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. மேலும் மாவட்டத்திலுள்ள மாவட்ட நிலை அலுவலகங்களின் பணியாளர்கள், சார்நிலை அலுவலகங்களின் பணியாளர்கள், தன்னாட்சி நிறுவனத் தலைமை அலுவலர்களின் பணியாளர்கள் என்ற வகையில் மொத்தம் ஒன்பது பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

மேலும் மாவட்டத்திலுள்ள மாவட்ட நிலை அலுவலகங்களின் பணியாளர்கள், சார்நிலை அலுவலகங்களின் பணியாளர்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனச் சார்நிலை அலுவலகங்களின் பணியாளர்கள் என்ற வகையில் ஒன்பது பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

ஆட்சிமொழிப் பயிலரங்கமும்-கருத்தரங்கமும்:ஆட்சி மொழித் திட்டம் தொடர்பாக அரசு அலுவலர்களும் பணியாளர்களும் நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.30,000 மும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 மும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

ஆட்சிச் சொல்லகராதி:  ஆட்சி மொழித் திட்டத்தைப் பின்பற்றக் கூடிய வகையில் அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையானத் தமிழ்ச் சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல்லகராதி என்ற நூலினைத் தயாரித்து அச்சிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப் பெறுகின்றது. இவ்வகராதி தேவைக்கேற்ப புதிக்கியும், புதியச் சொற்கள் சோ்க்கப்பட்டும் வெளியிடப்பெறுகிறது.

சிறப்புச் சொல்லகராதி:அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களைத் தொகுத்து அந்தந்தத் துறைகளுக்குரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது இவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக வெளியிடப்பட உள்ளது.

மாதிரி வரைவுகள்: அரசுத்துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், இணையங்கள் ஆகியவற்றில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் நன்கு எழுதப்படுவதற்குத் துணை புரியும் வகையில் மாதிரி வரைவுகள் என்ற நூல் அச்சிடப்பட்டு அதன்படிகள் விலையேதுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

சொல்வங்கி: புதிதாகப் பயன்பாட்டிற்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஊடகங்களின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வகையில் சொல்வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மொழியை சிறப்பிக்கும் விருதுகள் :தமிழ்மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுத் தொகை ஒரு இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படு கிறார்கள்.

திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் விருதுகள்: திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது,பாரதிதாசன் விருது,
திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது,
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கப்படும் விருதுகள்.

தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது,
கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது,ஜி.யு.போப் விருது,
உமறுப்புலவர் விருது, முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது, இளங்கோவடிகள் விருது,தமிழ்ச் செம்மல் விருது
எனப் பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த நூல்களுக்குப் பரிசு: இத்திட்டத்தின்கீழ் புதுக்கவிதை, மரபுக் கவிதை. புதினம், சிறுகதை, நாடகம், திறனாய்வு, பயண இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளில் நூல்கள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பெற்ற நூலாசிரியர்களுக்குப் பரிசுத் தொகையாக ரூ.30,000/-மும், சான்றிதழும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பரிசுக் தொகையாக ரூ.10,000/-மும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

நூல்கள் வெளியிட நிதியுதவி: தமிழில் சிறந்த நூல்கள் வெளியிடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நூலாசிரியர் களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயற் படுத்தப்படுகிறது. அரசு அச்சக மதிப்பீட்டின்படி நூலின் அச்சுச் செலவில் 50 %  தொகை அல்லது ரூ.50,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகை நூலாசிரியருக்கு நிதியுதவியாக இரு தவணையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற ஆண்டு வருமானம் ரூ.50,000/- க்குள் இருக்க வேண்டும்.

திருக்குறள் முற்றோதல் பரிசு: மாணவப் பருவத்தில் குறள் கருத்துகள் பசுமரத்தாணி போல் மனதில் பதிவதால் ஏற்படும் நன்மைகளைக் கருதி, 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவ ருக்கும் பரிசுத் தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 50 மாணவ மாணவியர்களுக்குக் குறள் ஒப்பித்தல் பரிசுத்தொகை வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்:

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மொழியை மாநில அரசு பேணிக் காத்து வருகிறது.

சமஸ்கிருதத்துக்கு முந்தைய மொழி தமிழ்மொழி என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், சமீபத்தில் கிடைக்கபெற்ற கீழடி அகழ்வாவுகளில் கிடைக்கபெற்ற ஆவணங்களும் உறுதி செய்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு ஐ.நா. அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத் தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top