புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்;சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உள்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டடியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: மனித நாகரிகத் தையே கேள்விக்குள்ளாக்கிய கொடூரமான சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நாகரிகமான உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்துகிறது. மலத்தை காலில் மிதித்துவிட்டால் பாம்பை மிதித்து விட்டதைப் போல பதறிப்போகிறோம். பாதையில் மலத்தைப் பார்த்தாலே சங்கடம் ஏற்படுகிறது. மனிதன் செய்கிற காரியமா இது. முழுப் பைத்தியக்காரன்கூட இச்செயலைச் செய்ய மாட்டான்.
இன்றைக்கு இறையூர் வேங்கைவயல் கிராமத்தை உலகமே அருவருப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஒரு சிலர் செய்த இந்தத் தவறால் இந்தக் கிராமமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் ஊரின் கறையைப் போக்க வேண்டுமென்றால் உண்மையான குற்றாவாளிகளை கண்டுபிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும்.
பட்டியல் இன மக்களுக்காக ஏராளமான அமைப்புகள் வேலை செய்கின்றன. அவர்கள் முழுக்க முழுக்க பட்டியல் இன மக்களையே திரட்டி அவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஆனால். பட்டியலின மக்களுக்காக அனைத்து சமூத்தை சேர்ந்தவர்களையும் ஒன்றினைத்துப் போராடும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. எங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்படுவது எந்த சாதி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
சட்டமன்ற உறுப்பினரின் தலையீடு: இங்கே குடிநீரில் மனித மலம் கலந்த கொடுமை தெரிய வந்த அரைமணி நேரத்தில் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.சின்னத்துரை அடுத்த அரைமணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கு உட்படுத்தினார். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் மாவட்ட நிர்வாகம் களத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு வரவைத்தது. அதே நேரத்தில், வேறு கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வாக இருந்து இருந்தால் நமக்கு ஏன் வம்பு என சம்பவ இடத்திற்கே வந்து இருக்கமாட்டார். ஒரு சமூகத்திற்காக இன்னொரு சமூகத்தை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று வெளியூர்கூட சென்று இருப்பார்.
எல்லா சமூகத்திலும் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பிட்ட சாதிக்குள் பிரச்சினை வரும்போது பிற சாதிகளில் உள்ள அரசியல் கட்சியினர் அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாமல் ஒதுங்கி நிற்பார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இங்கே இருக்கின்ற வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினரைப் பொறுத்தவரை தாங்கள் என்ன சமூத்தில் இருந்து வந்தோம் என்று யாரும் பார்ப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவுபடுத்தப்படும்போது, பாதிக்கப்படும் போது களத்தில் இருந்து போராடும் முன்னணிப் படையாக நாங்கள் இருக்கிறோம்.
தலித் மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற தோடு, தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறோம். அதற்கு உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சரையும் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமை இங்கு மட்டும் இல்லை. மாவட்டம் முழுவதும் இதுபோன்ற தீண்டாமை நிலவுகிறது. காவல் துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்புப் பிரிவு செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும்.
மக்கள் ஒற்றுமையாக இருப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். கிராமங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்கிற அதே நேரத்தில் மயான அமைதியை விரும்பவில்லை. அனைத்து மக்களும் சமம் என்கிற அமைத்தியைத்தான் விரும்புகிறோம். அத்தகைய அமைதியை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்ய வேண்டும். தவறும் பட்சதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தக் கடமையைச் செய்யும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அமைதியாக உள்ள கிராமத்தில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டுமென யாதே இந்த செயலைச் செய்துள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு சில பகுதிகளிலும் இரட்டைக் குவளை முறை, கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க முடியாத சூழல் நிலவுவது தெரிய வருகிறது. அந்தக் கிராமத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் தம்pழக விவசாயிகள், அரசியல் கட்சிகளில் போராட்டத்தைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்தது வரவேற்கத் தக்கது. ஆசிரியர்கள் போராட்டங்கள் என்பது தற்போதைய ஆட்சியே காரணம் என்று கூறமுடியாது. அது கடந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளும் இதில் அடங்கி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரரைப்போல செயல்படுகிறார். எனவே, அவரை திரும்பப்பெற வேண்டுமென சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது நியாயமான கோரிக்கைதான் என்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச்செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, ஐ.வி.நாகராஜன், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், என்.கண்ணம்மாள், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அரிசி, போர்வைகள் வழங்கள்: வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடந்துள்ள சம்பவத்தை கேட்டறிந்தார். உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கான நாங்கள் தொடர்ந்து போராடுவோம். உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்றார். மேலும், அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அடங்கிய அரிசி பை, போர்வை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.