Close
செப்டம்பர் 20, 2024 6:21 காலை

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்

புதுக்கோட்டை

திருமயம் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை  நடைபெற்ற ஏகாதசி விழாவில் பரமபதவாசலைக் கடந்து வரும் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள். தரிசனம் செய்ய வந்திருந்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா திங்கள்கிழமை  விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ள இத்தலம் திருமெய்யம் எனும் பெயர் மருவி திருமயம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் எனவும் சமஸ்கிருதத்தில் சத்தியஷேத்திரம் என பொருள்படுகிறது. கிபி 8, 9 -ம் நூற்றாண்டில் இங்குள்ள கோட்டையினுள் குடவரையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டது. இந்த குடவரையில் மேற்கில் சிவனும், கிழக்கில் விஷ்ணுவுக்கும் அருகருகே கோயில்கள் அமைந்துள்ளன. இது வேறெங்குமில்லாத சிறப்பாகும்.
விஷ்ணு பெருமான் சத்தியமூர்த்தி என அழைக்கப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற 108 தலங்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு. அதனாலேயே வைணவ பிரிவினரின் முக்கிய தலமாக திகழ்கிறது. மேலும் திருவரங்கம் வைணவக் கோயிலைவிட காலத்தால் முந்தியதால் இது ஆதிரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. குகைக் கோயிலினுள் விஷ்ணு பெருமாள் ஆனந்த சயனமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
இத்தகைய சிறப்பும், புகழும் பெற்ற இக்கோயிலில் மார்கழி மாத ஏகாதசி நாளான திங்கள்கிழமை  அதிகாலை 5.30 மணிக்கு திருமங்கை ஆழ்வார் எதிர்சேவையுடன் விஷ்ணு பெருமான் சிவப்புப் பட்டாடை உடுத்தி பரமபதவாசலைக் கடந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். பரமபத வாசல் திறந்தபோது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்களின் முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலித்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை  மாலை திருச்சாற்றுமுறை ஆழ்வாருக்கு மோட்சமளித்து மோகனாவதாரத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து அதிகாலை திருப்பள்ளி எழுச்சிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து அனந்த சயன அலங்காரத்துடன் விஸ்வரூப தரிசனமும், ராஜ அலங்கார சேவையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

விழாவில், தமிழ்நாடு சட்டத்துறை  எஸ். ரகுபதி,  மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வருவாய் கோட்டாட்சியர்  முருகேசன், புதுக்கோட்டை கோயில்கள் அறங்காவல் குழு முன்னாள் தலைவர், ஆர். வைரவன், உபயதாரர்கள் மதுரை டி.எஸ். சுந்தரம்அய்யங்கார்,  இளஞ்சாவூர் கே.எல். அழகப்பன், திருமயம் ராமானுஜஅய்யங்கார், ஆர்.எம்.எஸ். சேதுபதி, க.தெ.க. உருக்கால், மேலூர் சா.அ. குடும்பத்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திருமெய்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top