Close
செப்டம்பர் 20, 2024 6:40 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவிக்க ரொக்கப்பரிசுகள்…!

மஞ்சப்பை திட்டம்

மஞ்சப்பை திட்டம் மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளைவழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக  பிற தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்ற சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கௌரவிக்க முன் வந்துள்ளது.

மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்கு வித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்கு விப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https://pudukkottai.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப் பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு… ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.

மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாக பணிகளைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே மீண்டும் மஞ்சப்பை  பயன்பாட்டின்  அடிப்படை நோக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top