புதுக்கோட்டையில் இயங்கி வந்த கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் இயங்கி வந்த கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் அலுவலகத்தின் மூலமாக மண்பாண்டங்கள் தயாரிப்போர், பனைவெல்லம் தயாரிப்போர் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமியத் தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், மேற்படி அலுவலகம் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து கடந்த 6-ஆம் தேதி முதல் புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் இயங்கி வந்த உதவி இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டது.
இந்த உதவி இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்தும், உடனடியாக புதுக்கோட்டையிலேயே உதவி இயக்குனர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பேரணியாகச் சென்று திலகர் திடலில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார்.
மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் எஸ்.யாசிந், எம்.முத்தையா, கே.ரெத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர்.