Close
நவம்பர் 21, 2024 11:54 மணி

செங்கொடிதான் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே சிந்தனை மாற்றத்தை செங்கொடி இயக்கத்தால் மட்டுமே  ஏற்படுத்த முடியும் என்றார் தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இனமக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.]

இதில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதாவது:

இறையூர் பட்டியல் இன மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்ற வழிபாடு நடத்தியதை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை இன்னமும் மறுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய கோவில்களிலும் பட்டியல் இனமக்க ளின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் முன்வர வேண்டும்.

வேங்கைவயலில் குடிநீர் குழாயை மாற்றுவதாலோ, குடிநீர்த் தொட்டியை இடிப்பதாலோ தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. மக்களின் மூளையில் உள்ள சிந்தனையை மாற்ற வேண்டும். செங்கொடி இயத்தால் மட்டுமே மக்களின் மனதில் அத்தகைய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அத்தகைய மனமாற்றத்தை ஏற்படுத்திய வரலாறு செங்கொடி இயக்கத்திற்கு உண்டு.

இந்து மக்களுக்காகவே கட்சி நடத்துவதாக சொல்கின்ற பாரதிய கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேங்கைவயல் குறித்து வாய்திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை வன்கொடுமை நடக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம்.

சாதி, மத வெறியை கிளறி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் சித்தாந்தம். அதனால்தான் மதசார்பின்மைய, மக்கள் ஒற்றுமை, பெண்கள் முன்னேற் றத்தை வலியுறுத்துகின்ற பகுதியை சட்டமன்றத்தில் ஆளுநர் திட்டமிட்டே பேச மறுத்தார்.

வடநாட்டைப் போல தமிழ்நாட்டிலும் கும்பலாகச் சேந்து பாலியல் வன்கொடுமை செய்வது, கும்பலாகச் சேர்ந்தே அடித்துக்கொள்வது போன்ற கும்பல் கலாசாரச்சாரத்தை பரப்புகின்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பட்டியல் இனமக்கள் பல வழிகளிலும் வஞ்சிக்கப்படுகின்றனர். ஊரில் உள்ள பொதுச் சொத்துகளை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதில்லை. கோவில், குளம், மைதானம், கலையரங்கம் போன்ற ‘பொது’ என்கிற எந்த உரிமையையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

பட்டியல் இன மக்களுக்கு தனியாக குடிநீர்த் தொட்டி இருக்கக்கூடாது. அனைத்துப் பகுதியிலும் உள்ள குடிநீர்த் தொட்டி மூலமாகவே குடிநீர் வினியோகம் நடைபெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட 32 குடியிருப்புகளுக் கும், ஒவ்வொரு தனி நபருக்கும் குறிப்பாக வயிற்றில் கருவாக இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

இது உளவியல் ரீதியாக அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரணம். ஓரிரு நாட்கள் மனிதக் கழிவு கலந்த குடிநீரை அந்த மக்கள் குடித்திருக்கிறார்கள். இந்த உளவியல் சிக்கலை அரசு புரிந்து கொண்டு ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்த பட்சம் ரூபாய் ஒரு லட்சத்தை வழங்க வேண்டும்.

காவல்துறை நினைத்து இருந்தால் மலம் கலந்தவர்களை அடுத்த நாளே கண்டுபிடித்து இருக்க முடியும். பல நாட்கள் இழுத்தடித்து பட்டியல் இன மக்களை மிரட்டியோ, ஆசை வாரத்தை காட்டியோ இப்பிரச்சினையை திசைதிருப்பப் பாரக்கின்றனர். இது பொதுவாக காவல்துறை கையாள்கின்ற உத்தி என்பது எங்களுக்குத் தெரியும். காவல்துறை உண்மையான குற்றவாளியை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றர்  கே.சாமுவேல்ராஜ்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், மாநில துணைச்செயலாளர் டி.சலோமி, விவசாயதொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர்.

சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனாரத்தனன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top