கொங்கு மண்டலத்தின் விடிவெள்ளி காசியண்ண கவுண்டர் மறைவுக்கு கொமதேக இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்ட இரங்கல் செய்தி:
மரியாதைக்குரிய காசியண்ண கவுண்டரின் இழப்பு ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்திற்கும் பேரிழப்பாகும். அவரைப் போல ஒரு மாமனிதரை பார்க்க முடியாது. தமிழக விவசாயிகளுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு பல ஆண்டுகளாக முன் நின்று போராடியவர்.
தன்னிடம் உதவி கேட்ட எந்த விவசாயிக்கும் இல்லையென்று கை விரித்தது கிடையாது. தன்னால் பயில முடியாத கல்வியை அனைவரும் பயில வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில்தான் கல்வி நிறுவனத்தை தொடங்கினார். படித்த குழந்தைகள் அனைவரும் அவரை சொந்தத் தாத்தா போலவே பாவித்து படித்து வளர்ந்தார்கள். தன் பள்ளியில் படித்த குழந்தைகளுக் காகவும், விவசாயிகளுக்காகவுமே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தார்.
பாரதத்தின் பிரதமரும் அவருக்கு ஒன்றுதான் தன் பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒன்றுதான். அனைவரும் சரிசமம் என்ற உணர்வோடு கடைசி வரை வாழ்ந்தவர். கல்வித்தந்தை என்ற பெயரும் விவசாயிகளின் விடிவெள்ளி என்ற பெயரும் இவருக்கு தான் பொருத்தம்.
இவ்வளவு சிறப்புகளை பெற்ற இந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழகத்தினுடைய அனைத்து விவசாயிகளுக்கும் அவர் பள்ளி குழந்தைகளுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆறுதலை சொல்லி வீரவணக்கம் செலுத்துகிறோம்.