உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமையும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அஇஅதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பகுதிவாரியாக பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தால் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகபுரம், பெரியார் நகர் , அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான திரு கே.ஏ .செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , முன்னாள் சட்டமன்ற கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல தீர்ப்பாகவே அமையும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.ஆகவே தொண்டர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தல் மூலம் அதிமுகவின் செல்வாக்கு நிரூபிக்கப்படும்.
இருபெரும் தலைவர் மறைவுக்கு பிறகு சிறந்த முறையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் எளிதில் சந்திக்க கூடிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இந்தியாவே வியக்க தக்க அளவிற்கு திட்டப்பணிகளை தந்து இந்தியாவில் முதல் மாநிலமாக கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.தொண்டர்கள் அனைவருக்கு இடைத் தேர்தலில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றார் கே.ஏ. செங்கோட்டையன்.