Close
நவம்பர் 25, 2024 6:14 மணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் துளிர்திறனறிதல் தேர்வு விழிப்புணர்வு மற்றும் தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் இரா.பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ப.சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக  கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினம் வரலாறு குறித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன25 -ல் தொடங்கப்பட்டது. அதனை நினைவு கூரும் விதமாக இந்த தினம் முதன் முதலில் 2011 -இல் இளம் வாக்காளர்களை தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது. இது வாக்குரிமை மற்றும் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடும் நாள் என்பதில் சந்தேகமில்லை. வாக்காளர்களின் சேர்க்கையை, குறிப்பாக தகுதியானவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.

முன்னதாக வாக்காளரின் தகுதி வயது 21 ஆக இருந்தது, ஆனால் 1988 -இல் அது 18 ஆக 61 -ஆவது சட்டம் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா இந்தியாவில் வாக்காளரின் தகுதி வயதைக் குறைத்தது என்றும்,13வது தேசிய வாக்காளர் தினத்திற்கான கருப்பொருள், வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன் என்பது வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வாக்குகளின் மூலம் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான தனிநபர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கிறது.18 வயது நிரம்பிய அனைத்து குடிமக்களும் தேர்தலில் வாக்களிக்க மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(Tamilnadu Science Forum) அல்லது தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் என்பது தமிழ்நாட்டில் அறிவியலை பரப்பும் நோக்கத்தைக் கொண்டு கடந்த 39 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படும் அமைப்பு ஆகும். இது அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பட்டோரையும் உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் நடத்தப்படுகின்ற துளிர் திறனறிதல் தேர்வில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.  தேர்வு எழுதுவதன் மூலம் எதிர்கால போட்டி தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எவ்வித சிரமமின்றி எழுதக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்படுத்தி தருகிறது.

துளிர் தேர்வு எழுதுவதன் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் விஞ்ஞான துளிர் மாத இதழ் வழங்கப்படும் எனவும் இதுபோன்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.நிறைவாக ஒவிய ஆசிரியர் முனைவர் ம.பூபதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top