குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, 672 பயனாளிகளுக்கு ரூபாய் 50 -லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (26.01.2023) தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசு தாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 672 பயனாளிகளுக்குரூ.50,08,965 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூபாய் 4,25,000 மதிப்பீட்டிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 602 பயனாளிகளுக்கு ரூபாய் 12,15,890 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 17பயனாளிகளுக்கு ரூபாய் 29,71,575மதிப்பீட்டிலும், தோட்டக் கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூபாய் 3,68,000மதிப்பீட்டிலும்,
வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு 28,500 மதிப்பீட்டில் என மொத்தம் 672 பயனாளிகளுக்கு ரூ.50,08,965மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 141அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அக்ஸீலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல சங்கம், கள்ளப்பெரம்பூர் அரசு உயர் நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 149க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் மாவட்டஆட்சித் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி .கே .ஜி .நீலமேகம், தஞ்சாவூர் காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் , மாவட்ட காவல் கண்காணிப்பாள ஆசிஷ் ராவத் , கூடுதல் ஆட்சியர் (வருவாய்) .என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி).எச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேர்முக உதவியாளர் (பொது) கி.ரங்கராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும்.
மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது.