Close
செப்டம்பர் 20, 2024 5:54 காலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து  3 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

பொன்னமராவதியிலிருந்து 3 வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், 3 புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி  (27.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர்  அமைச்சர்  கூறியதாவது: கல்வி முன்னேற்றமும், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை கொண்டே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர்  பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தினை  முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். இதன்மூலம் கூடுதல் செலவு ஏற்படும் பட்சத்திலும், தற்போது இந்த இலவச பேருந்து பயணத் திட்டத்தினை மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் இந்த அரசு  நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், பொன்னமராவதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட 3 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவைகள்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டையிலிருந்து அரசமலை, காரையூர், மறவாமதுரை ஆகிய கிராமங்கள் வழியாக நாளொன்றிற்கு சுமார் 550 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சடையம்பட்டிக்கும், மேலும் பொன்னமராவதியிலிருந்து புலவனார்குடி, மறவாமதுரை, மேலத்தானியம், விராலிமலை ஆகிய கிராமங்கள் வழியாக நாளொன்றிற்கு சுமார் 750 பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், மேலும் பொன்னமராவதியிலிருந்து கொப்பனாம்பட்டி, மூலங்குடி, செவலூர், குழிப்பிறை ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 500 பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் என மொத்தம் 3 புதிய பேருந்து வழித்தடங்கள் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் இப்பேருந்து சேவையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்  குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர்  சுந்தரி அழகப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் சேகர், உதவி இயக்குநர் அ.செந்தில், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, கிளைமேலாளர் அருண்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top