Close
நவம்பர் 22, 2024 4:44 மணி

எதிர்காலத்தில் தூய காற்று நஞ்சில்லாத உணவை தர வேண்டும் என்பதே குறிக்கோள்: நாம் தமிழர் சீமான் உறுதி

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான்

எதிர்காலத்தில் தூய காற்று நஞ்சில்லாத உணவை தர வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற  சீமான்  மேலும் பேசியதாவது:

 ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்ற  நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மேகனாவை  தொகுதி வாக்காளர் மத்தியில் அறிமுகம் செய்து மேலும் அவர்  பேசியதாவது:

எவரிடமும் சென்று ஆதரவு கேட்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களின் ஆதரவை நம்பி களத்தில் இருக்கிறது. தமிழினத்தை முன்னெடுத்து தேர்தலில் நிற்கிறது.

இதுவரை நாங்கள் தோற்கவில்லை மக்கள் தான் தோற்கிறார்கள்.  நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம் வெல்வோம். நாம் தமிழர் கட்சி வென்றால் வரலாற்றில் மாபெரும் புரட்சி ஏற்படும்.  மானம் , இனம், அறம் என மூன்றும் கொள்கையாக கொண்டு வாழ்ந்தவர்கள் நம் இன மக்கள்.

திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு கருத்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு கருத்தை கொண்டுள்ளது. ஆனால் நாங்கள்  ஒரு லட்சிய உறுதியோடு தான் இந்த தேர்தலை எதிர் கொள்கிறோம்.

தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றிய திட்டங்கள் ஒன்றையாவது  இவர்கள் சொல்ல முடியுமா.  மக்களின் பிரச்னைக்காக மக்களோடு நின்று போராடும் கட்சிதான்  நாம் தமிழர் கட்சி.

எத்தனையோ தொகுதியில் வென்று எதுவும் செய்யாத நீங்கள் கிழக்குத் தொகுதியில் மட்டும் வென்று என்ன செய்யப் போகிறீர்கள் , திருமகன் ஈவெரா முதலில் நாம் தமிழ் கட்சியில் தான் சேர வந்தார்.

ஈவிகேஎஸ். இளங்கோவன் சட்டசபைக்கு சென்றாலும் மக்கள் பிரச்னைகளை குறித்து பேச மாட்டார். எதிர்காலத்தில் தூய காற்று நஞ்சில்லாத உணவை தர வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள்.

குடிநீரை காசுக்கு விற்பனை செய்வது போன்ற ஒரு துரோகம் எதுவும் இல்லை. தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிப்பவர்களுக்கு எதற்கு இலவசம்  தர வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி , மருத்துவத்தை தவிர வேறு எதுவும் இலவசம் கிடையாது. எங்களின் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும்.   எங்கள் உழைப்பை மட்டுமே இதில் கொட்டுவோம். மாற்றத்துக்கான விதையை ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மக்கள் விதைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் கிழக்குத் தொகுதியில் 34 சதவீத மக்கள் வாக்கு செலுத்த வரவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு செலுத்துவதால் எந்த வித மாற்றமும்  நிகழப் போவதில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணிக்கு முடியட்டும். நாம் தமிழர் கட்சிக்கு விடியட்டும். அதற்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிங்கள் என்றார் சீமான். கூட்டத்தின் முடிவில் தேர்தல் நிதியாக  கட்சி நிர்வாகிகள் சார்பில் 3 லட்ச ரூபாய் நாம் தமிழர் சீமானிடம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top