அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிரமாண்டாமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை (பிப்.4) புதுக்கோட்டையில் தொடங்குகிறது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது.
4 -ஆம் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானாவில் இருந்து (லெணா திருமண மண்டபம் அருகில்) விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைப் பேரணி தொடங்குகிறது.
இப்பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான விவசாயத் தொழிலாளர்களும், செம்படைப் போராளிகளும் அணிவத்துச் செல்ல இருக்கின்றனர்.
புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விண் அதிரும் கோரிக்கை முழக்கத்துடன் அணிவகுத்துவரும் பேரணி தடிகொண்ட அய்யனார் திடலை வந்தடைகிறது.
தோழர் கோ.வீரையன் நினைவுத்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகிக்கிறார். பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் மற்றும் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
தொடர்ந்து பிப்.5, 6 தேதிகளில் புதுக்கோட்டை கற்பக விநாயகா மஹாலில் தோழர் ஜி.மணி நினைவரங்கில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 650-க்கும் அதிகமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.