புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இன்று அதிகாலை லேசான தூறலுடன் மழை தொடங்கியது. பின்னர் விட்டுவிட்டு பெய்த கனமழை மாலையில் சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலை, அக்ரஹாரம், மாரியம்மன் கோவில், டி.இ.எல்.சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.
விவசாயிகள் வேதனை: கறம்பக்குடி தாலுகாவில் ஒரு சில பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று பெய்த மழையால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதேபோல் கறம்பக்குடி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் மழைநீர் புகுந்தது. நெல் குவியல்கள் மழை நீரில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே கன மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், நெல் பயிரிட்டு அறுவடை செய்ய தயாராக இருந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்ல வரத்து வாரிகள் இன்றி ஆங்காங்கே கடை, வீடு மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கந்தர்வகோட்டையில் கனமழை இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்று விட்டு பள்ளி முடிந்து மீண்டும் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்தனர்.
தற்போது கந்தர்வகோட்டை பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கோட்டைப்பட்டினம் கோட்டைப்பட்டினம் கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இந்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை பணிகள் தீவிரம்: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அணைவயல், பனசக்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், ஆலங்காடு, கீழாத்தூர், மேலாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆற்றுப்பாசனம் மற்றும் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக, இந்த ஆண்டு அதிக அளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போதும் இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தானிய சேமிப்பு கிடங்கு தற்சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பெய்த மழையால் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும், சாய்ந்தும் தண்ணீரில் மூழ்கியும் வீணாகி வருகின்றன.
விவசாயிகளது நெல் மணிகளை பாதுகாக்க போதுமான தானிய சேமிப்பு கிடங்கு இல்லாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நெல் மணிகள் மழையால் நனைந்து சேதமாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மழையால் நனைந்து சேதமாகி போன நெல் விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய உலர்கள வசதி, தானிய சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தற்போது கூட இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெல் அறுவடை செய்ய நெல் வயல்களில் தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் அப்படியே வேருடன் நீரில் சாய்ந்து அழுகி வீணாகி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் விவசாயம் செய்து விட்டு அதன் பலன் கைக்கு கிடைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை தான் பெரும்பாலும் நிறைவேற்ற படுவதில்லை. உலகில் உள்ள பல நாடுகளில் உணவுக்காக திண்டாடி வருகின்றனர்.
ஆனால் இங்கு விவசாயிகள் தாங்கள் அரும்பாடுபட்டு விளைவித்த தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்பு கிடங்கு மற்றும் தானியங்களை உலர்த்த மற்றும் கொட்டி வைக்கக் கூட உலர் களங்கள் இல்லாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இனியாவது அரசு விவசாயிகளின் துயர் துடைக்க முன் வரவேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறினர்.