Close
நவம்பர் 22, 2024 4:02 மணி

உழைப்பாளிகளைப் பாதுகாக்காத நாடு முன்னேற முடியாது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்ற சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் அதிகமான உழைப்பாளிகள் கிராமப்புறத்தில் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடி பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பிரச்னைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. உழைப்பாளிகளைப் பாதுகாக்காத எந்த ஒரு நாடும் பொருளாதாரத்தில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.4 லட்சம்கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், தற்பொழுது பட்ஜெட்டில் வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 30 நாட்கள்கூட வேலை கொடுக்கப்படுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.  எந்த மாநிலத்திலும்  யாருக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை.

கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கின்ற இவர்களது நடவடிக்கை தீவிரமாக இருப்பதால், இவர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் உழைப்பாளிகளை திரட்டுவதுதான் எங்களது அடிப்படையான நோக்கமாகும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சட்டமாக்கினாலும் அதை நிர்வகிக்கின்ற கட்டமைப்பு உருவாக்கப்படாமல், மாநில அரசின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனித் துறையும், தனி பட்ஜெட்டும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் 150 நாள் வேலை தருவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, பேரூராட்சி பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு பிந்தைய பட்ஜெட்டில் அதற்கென நிதி ஒதுக்கீடு இல்லை.

தேர்தல் சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தியே கூட்டணி உடன்பாடு செய்யப்படுகிறது. அதன்பிறகு, மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதை சுட்டிக்காட்டுவது, விமர்சிப்பது ஜனநாயகக் கடமை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார் லாசர்.

புகைப்படக் கண்காட்சி  திறப்பு:

புதுக்கோட்டை
மாநில மாநாட்டில் திறக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை பார்வையிடும் நிர்வாகிகள்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிப்.4 -ல்  தொடங்கி 5, 6  ஆகிய 3 நாள்கள்  புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான சனிக்கிழமை மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாநில துணைத் தலைவர் டெல்லிபாபு, விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top