Close
நவம்பர் 22, 2024 1:25 மணி

திருவொற்றியூர் மருத்துவமனைக்கு ரூ. 7 லட்சத்தில் உபகரணங்கள்

சென்னை

திருவொற்றியூர் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் மாநகராட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மருத்துவ அதிகாரி டாக்டர் மாலதியிடம் ஒப்படைத்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர். உடன் எம்.ஆர்.எப். நிறுவன பொது மேலாளர் சாக்கோ ஜேக்கப், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகிகள் வி.இராமநாதன் மு. கலைவாணன் உள்ளிட்டோர்

திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை  எம்ஆர்எப் நிறுவனம் வழங்கியது.
 சென்னை திருவெற்றியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை எம்.ஆர்.எப். நிறுவனம் சனிக்கிழமை வழங்கியது.
திருவொற்றியூர் எல்லை அம்மன் கோவில் அருகே சென்னை மாநகராட்சி சார்பில்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் அனைத்து வகை மகப்பேறு மருத்துவ சிகிச்சைகள்,  சிறிய வகை நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
இம்மருத்துவமனையின் தேவையை உணர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் இயங்கி வரும் எம்.ஆர்.எப். நிறுவனம் தனது சமுதாய பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான ரூ. 7 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை வழங்க முன் வந்ததை அடுத்து இதற்கான நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர்  கலந்து கொண்டு எம்.ஆர்.எப். நிறுவனத்தின் பொது மேலாளர் சாக்கோ ஜேக்கப்  முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை மாநகராட்சி உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் மாலதியிடம் ஒப்படைத்தார்.
இதில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட்,  இசிஜி, கருவில் உள்ள குழந்தைகளின் இதயத் துடிப்பை அறிந்து கொள்ள உதவும் கார்டியோ டோகோ கிராபி, அறுவை சிகிச்சை அரங்குகளில் இருக்கும் நச்சு கிருமிகளை ஒழிக்க உதவும் மருந்து தெளிப்பான்கள்,   அலமாரிகள் நாற்காலிகள் உள்ளிட்டவைகள் அடங்கும்.
நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி சங்கரின் கோரிக்கையை ஏற்று அருகிலுள்ள சுனாமி மறுவாழ்வு அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சமுதாய பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் செய்து தருவதற்கு எம்ஆர்எப் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் ஜேக்கப் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, எம்.ஆர்.எப். நிறுவன அதிகாரிகள் சந்தர், சம்பத்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி நந்தகுமார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வி.இராமநாதன், வட்ட செயலாளர் மு.கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top