Close
செப்டம்பர் 20, 2024 7:21 காலை

பாஜக அரசைக் கண்டித்து ஏப்.5 தில்லியில்  நடைபெறும் பேரணியில் பங்கேற்க விவசாய தொழிலாளர் சங்கம் அழைப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெறும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது தமிழ்மாநில மாநாட்டில் நினைவு ஜோதியை பெறும் எம்எல்ஏ சின்னத்துரை. உடன் விசதொ நிர்வாகிகள் ஏ. லாசர் உள்ளிட்டோர்

வாழ்வுரிமையைப் பறிக்கும் பாஜக அரசைக் கண்டித்துஏப்.5 -தில்லியில்  நடைபெறும் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்க விவசாயதொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியது.

விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில்  நடைபெறும் பேரணியின் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அழைப்பு விடுத்துள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது தமிழ் மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்.4,5,6 தேதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக் கிழமை  புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் தோழர் ஜி.மணி நினைவரங்கில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது.

கடந்த மாநில மாநாடு நடைபெற்ற திருவாரூரில் இருந்து கொண் டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை சங்கத்தின் முதல் மாநில பொதுச் செயலாளர் மூத்த நிர்வாகி பெரி.குமாரவேல் ஏற்றிவைத்தார்.  திருவாரூரில் இருந்து  நாவலன் நினைவாக கொண்டுவரப்பட்ட ஜோதியை அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், வெண்மணியில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை, அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலத் தலைவர் ஏ.லாசர், பி.சீனிவாசராவ் நினைவு ஜோதியை மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம்,

திருச்சி கே.செல்லம்மாள் நினைவு ஜோதியை மாநில பொருளாளர் எஸ்.சங்கர், தேனி எஸ்.மொக்கராஜ் நினைவு ஜோதியை மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ,  தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் நினைவு ஜோதியை மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில செயலாளர் எஸ்.பூங்கோதை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ  வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், வரவு-செலவு அறிக்கையை மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.பாஸ்கரன் பேசினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெறும் விதொச மாநில மாநாட்டு அரங்கில் சங்கக்கொடி ஏற்றிய மூத்த நிர்வாகி குமாரவேல். உடன் சங்க நிர்வாகிகள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: 
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக இருக்கும் மாகாத்மாகாந்தி தேசிய வேலை ஊரக உறுதித் திட்டத்தை சிதைக்கும் வகையில் தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை குறைத்துவரும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டிப்பதோடு, பட்ஜெட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தைப் பலப்படுத்துவ தோடு, வருடாந்திர வேலை நாட்களை 200-ஆகவும், கூலியை 600-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்கி வந்த தாலிக்கு தங்கம் வழங்கம் திட்டத்தை நிறுத்தியுள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த இத்திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும்.

கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களை கடன் வலையில் விரித்து ஏராளமான நுண்நிதி நிறுவனங்கள் கந்துவட்டிக் கொள்ளையடிக்கின்றன. அரசு மேற்படி நிறுவனங்களின் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சுய உதவிக் குழுக்களுக்கு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை
விதொச மாநில மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள்

ஊரக தூய்மைப் பணி காவலர்களை பணி நிரந்தரம் செய்து மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியமும் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம், வனவிங்கு சரணாலயம் என்பதன் பெயரில் வனவிலங்குகளை மட்டுமே பாதுகாப்பது என்ற எண்ணத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் என்ற திட்டத்தை செயல்படுத்தினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்டுவார்கள். எனவே, குமரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த உத்தேசித்துள்ள சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பேரணியின் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென  மாநாட்டில்  அழைப்பு  விடுக்கப்பட்டுதுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top