ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் பிரசாரம் செய்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார், வேட்பாளர்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். இதுவரை மொத்தம் 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய (பிப்.7) கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (பிப்.8) நடைபெெறவுள்ளது.
வரும் 10 -ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட 23 -வது வார்டில் அசோகபுரம் பகுதி 59 -வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதி வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்ததோடு அவர்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் வி.எஸ்.தர்மலிங்கம், கே.பழனிசாமி, கந்தசாமி, பி.பழனிசாமி, ரமேஷ்குமார், அருண்குமார், மணிகண்டன், எம்.எல்.ரமேஷ், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.