Close
செப்டம்பர் 20, 2024 8:58 காலை

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன: எடப்பாடி பழனிசாமி

ஈரோடு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டு இருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஈரோட்டில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது.

 2014 -ல் ஏற்காடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெறும் என ஜெயலலிதா கூறினார். அங்கு 78 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.
2014 மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன் மூலம் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக அமர்ந்தது. தற்போது, ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, 2024-ல் தமிழகத்தில் நம்முடைய கூட்டணி அனைத்து இடங்களில் வெற்றி பெறச் செய்யும். அதற்காக தேனீக்கள், எறும்புகள் போல வாக்குகளைச் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை. மக்களுக்காக எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழகம் முன்னேற் வேண்டுமானால், பொருளாதாரத்தில் நாம் முன்னேற வேண்டும். தமிழகத்தில் வேளாண்மை மற்றும் ஜவுளி தொழில்கள் தான் வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

அதிமுக ஆட்சியில் இந்த இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நீர் மேலாண்மைக்கு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தோம். 1652 கோடி செலவில் அவிநாசி -அத்திக்கடவு திட்டம் கொண்டு வந்தோம். ஏரிகளைத் தூர் வாரினோம். தடுப்பணைகளைக் கட்டி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினோம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜவுளித்தொழில் மிக முக்கிய தொழிலாளக உள்ளது. விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதன்மூலம், அவர்கள் வேலை வாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் மேம்பட்டனர். இலவச வேட்டி சேலை உற்பத்தி பணியினை ஈரோடு பகுதி விசைத்தறியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கவில்லை.

இதனால், விசைத்தறி தொழில் நலிவடைந்து, தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் முடங்கி, சிதைந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கு திமுக அரசு பதில் சொல்ல வேண்டும்
இதற்கு காரணம், திறமையற்ற முதல்வர் நாட்டை ஆள்வதுதான். இந்தியாவில், சூப்பர் முதல்வராக தன்னை ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். ஆனால், கலெக்சன், கரெப்சன், கமிஷனில் தான் அவர் சூப்பர் முதல்வராக உள்ளார். அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. யார் கட்சித் தலைமைக்கு அதிகமாக நிதி கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு சிறந்த அமைச்சர் என பாராட்டப்படுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு அமைச்சர், இந்த நிகச்சியில் பங்கேற்பதைத் தடுக்க பொதுமக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார். இவற்றை எல்லாம் தேர்தல் அதிகாரி வேடிக்கை பார்க்கிறார். ஈரோடு எஸ்பி, திமுக மாவட்டச் செயலாளர் போல் செயல்படுகிறார். ஆட்சி மாறும்போது காட்சி மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எதிரியாக செயல்பாட்டால், எதிர்வினையைச் சந்திப்பீர்கள்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாது. அதுபோல, வாக்காளர்களை அடைத்து வைத்தால் அதிமுக வெற்றியைத் தடுக்க முடியாது.ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. அதற்கு 20 அமைச்சர்கள் இங்கு தேர்தல் பணியில் உள்ளனர்.

அவர்களது பயமே நமது வெற்றிக்கு அறிகுறி. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களிடம் கொள்ளையடித்த பணம். இந்த தேர்தல் மூலம் உங்கள் பணம், உங்களிடத்தில் வந்து சேர்கிறது. எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு அதிமுகவிற்கு வாக்களியுங்கள்.

திறமையற்ற முதல்வரான ஸ்டாலின், நாட்டை பாழ்படுத்திக் கொண்டு வருகிறார். எல்ல துறையும் சீரழிந்து விட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இன்று ரிப்பன் வெட்டுகிறார்கள். அதிமுக பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டிக் கொண்டு இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அவரது அப்பாவிற்கு நினைவிடம், மதுரையில் நூலகம், எழுதாத பேனாவிற்கு சிலை வைக்க அரசு நிதியை ஒதுக்கியுள்ளார். முன்னாள் முதல்வரது நினைவிடத்திலேயே ரூ 2 கோடியில் பேனா வைத்து விட்டு, 78 கோடியை மக்கள் நலத்திட்டத்திற்கு செலவு செய்யலாமே. அரசு பணத்தை எடுத்து குடும்பத்திற்கு செலவு செய்வது நியாயமா? மக்கள் வரிப்பணம் வீணாகக் கூடாது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்காக ரூ 484 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளோம். இத்திட்டத்திற்கு சோதனை ஓட்டம் முடிந்து, 21 மாதம் ஆகியும் இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்துள்ளனர்.

அதேபோல, திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை யாராலும் மறக்க முடியாது. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வாங்கி ரூ 500 கோடி ஊழல் செய்துள்ளனர். உங்களை ஏமாற்றி கொள்ளை அடித்த இந்த பணத்தை வாங்கிக் கொண்டு, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தியுள்ளோம். நாங்கள் கொண்டுவந்த திண்டல் உயர்மட்ட பாலம், நான்கு வழிச்சாலை திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர். கடந்த 21 மாதத்தில் ஈரோடு கிழக்கில் ஒரு பணியையும் செய்யவில்லை.

முதல்வர் ஸ்டாலின் எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றியே சிந்திக்கிறார். நாட்டு மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். தமிழ் திரையுலகில் எல்லா திரைப்படங்களையும் உதயநிதியே வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, கோடி, கோடியாய் கொள்ளையடிக்கிறார். இதனால், குறைந்த பட்ஜெட்டில் தயாரான 150 படங்களை திரையிட முடியவில்லை.

திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் நிதி நிலையை சீரமைப்பதாகச் சொன்னவர்கள், கடந்த 2 ஆண்டில் ரூ 1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்கவில்லை – பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டனர்.

தேர்தலின் போது கொடுத்த 520 வாக்குறுதிகளில், 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சைப்பொய் சொல்கிறார். குடும்பத் தலைவிக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கவில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்கவில்லை. 7 லட்சம் முதியோருக்கு உதவித் தொகையை நிறுத்தி விட்டனர். மகளிருக்கு இரு சக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணின் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி விட்டனர்.

நாங்கள் வெற்றி பெற்றதும் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்னார்கள். தற்போது இடைத்தேர்தலிலாவது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி கூற வேண்டும். கவர்ச்சிகரமான பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி கொல்லைப்புறமாக திமுகவினர் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு கிடைக்கும் வெற்றி, திமுகவிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய் வாக்கு கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என உணர்த்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top