Close
நவம்பர் 22, 2024 12:17 காலை

ஒவ்வொரு மனிதனுக்கும் இறை பக்தியும் குரு பக்தியும் முக்கியமானவை

மதுரை

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்

இறை பக்தியும் குரு பக்தியும் மட்டுமே நம்மை காப்பாற்றும் என்றார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ வைபவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் சொற்பொழிவு எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே.திருமண மண்டபத்தில் நடக்கிறது.

தொடக்க நாளான நேற்று எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பக்தசூர்தாஸ் என்ற தலைப்பில் பேசியதாவது: ஊனமுற்றோரை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது. அவர்களிடம் அளவற்ற பரிவும், அன்பும் காட்ட வேண்டும் என்பதை மகா ஸ்வாமிகள் வலியுறுத்தினார். அந்த கருத்தையே பக்த சூர்தாஸ் சரித்திரமும் வலியுறுத்துகிறது.

பார்வையற்ற மாணவர்கள் தம்மை தரிசிக்க வந்த போது தம் ஒரு நாள் மௌனத்தை உடனே கைவிட்டு அவர்களிடம் பேசினார் மகா சாமிகள். என் குரலால் தானே அவர்கள் என்னை அறிய முடியும் என் விரதம் முக்கியமல்ல என்று விளக்கமும் சொன்னார்.

சுவாமி விவேகானந்தர் வியந்து கொண்டாடிய கவிதைகள் சூர்தாஸ் அருளியவை. ஒரு லட்சம் கவிதைகளுக்கு மேல் அருளியவர் அவர். எல்லாம் இசை பாடல்கள் அவற்றில் தற்போது கிடைப்பவை சுமார் 8000 பாடல்கள் மட்டுமே.. இந்து மகா சமுத்திரம் போல் சூர் தாஸ் பாடல்கள் இந்தி மகா சமுத்திரம் என பாராட்டினார் ஆச்சார்ய வினோபாவே.

தாய் தந்தையாலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் பல பெண்மணிகளால் தாயன்பு செலுத்தி வளர்க்கப்பட்டார். வல்லப ஆச்சாரியாரின் சீடரான அவர் வடமதுரை ஆலயத்தில் ஆஸ்தான பாடகர் ஆக விளங்கிய பெருமைக்குரியவர். 14 ஆண்டுகள் வாழ்ந்தவர். கிருஷ்ண பக்தியே அவர் வாழ்வாக இருந்தது. பல பாடல்கள் இந்தி திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. எம்.எஸ். சுப்புலட்சுமி அவரது பாடல்கள் பலவற்றை பாடி பிரபலப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய குரு வல்லபச்சாரியார் மேல் பெரும் பக்தி செலுத்தியவர் சூர் தாஸ். அவரை கடவுளுக்கு நிகராக கருதியவர். மாதா பிதா குரு தெய்வம் என்கிறோம் அவரை மாதாவும் பிதாவும் கைவிட்டனர். ஆனால் குருவும் தெய்வமும் கைவிடவில்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இறை பக்தியும் குரு பக்தியும் முக்கியமானவை. அதை கடைப்பிடித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை நெறி ஆகும்.  எனவே இறை பக்தி, குரு பக்தி ஆகிய இரண்டும்தான் நம்மை காப்பாற்றும். இதையே பக்த சூர்தாஸ் சரித்திரமும் வலியுறுத்துகிறது இவ்வாறு எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார் .

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இதையடுத்து மறுநால்  மாலையில் நடந்த  நிகழ்வில் அருணகிரிநாதர் என்ற தலைப்பில் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top