Close
நவம்பர் 22, 2024 5:26 மணி

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளிச்சிறுமிகளின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கல்

புதுக்கோட்டை

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மாணவிகளின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச்சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம்சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, வெள்ளைச்சாமி மகள் சோபியா  (7ம் வகுப்பு), ராஜ்குமார் மகள் தமிழரசி (8ம் வகுப்பு), மோகன்குமார் மகள் இனியா(6ம்வகுப்பு) மற்றும் பெரியண்ணன் மகள் லாவண்யா  (6ம் வகுப்பு) ஆகிய 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த தகவலறிந்து ஆறுதல் தெரிவித்து, அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் பேரில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை மாணவிகளின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு , கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), முருகேசன் (புதுக்கோட்டை), உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  4 பள்ளி சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வந்தனர்.

கரூர்- திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரை இணைக்கும் மாயனூர் கதவணையில் இடைநிலை ஆசிரியர் ஜெபசகயூ இப்ராகிம்,  அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் உடன் 13 மாணவிகள் நேற்று  மதியம் 1 மணியளவில் மாயனூர் கதவணை மற்றும் மற்றும் பூங்கா ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.

பின்னர், கதவணை அருகே குளித்துக்கொண்டிருக்கும் பொழுது, 4 மாணவிகள் நீரில் மூழ்கி மாயமாகினர்.  இதுகுறித்து மாயனூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி நான்கு மாணவிகளில் சடலங்களை  மீட்டனர்.

தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உயிரிழந்த நான்கு மாணவிகளின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட  உயிரிழந்த நான்கு மாணவிகள் இனியா (11), லாவண்யா(11), தமிழரசி(13), சோபிகா(12)  என்பதை  உறுதி செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top