ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விதிமீறல்கள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதனால் தேர்தல் முறையாக நடப்பதற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை
இந்த தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி கட்சிகள் அவரவர்களின் பொருளாதாரத்திற்கு தகுந்த போல தினம் தோறும் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதன் முதலில் தமிழகதலைமை தேர்தல் அதிகாரிக்கு 18/01/23 ஆம் தேதி மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைமனு அனுப்பினோம்.
அதன்பின்பு ஈரோட்டில் தேர்தல் அதிகாரியிடமும் நேரடியாக மனு அளித்தோம்.அதன் பின்பு ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டி தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்தோம்
ஆனால் அவர் துண்டு பிரசுரம் வழங்குவதற்கு அனுமதி தேவையில்லை நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.அதன் பின்பு நாங்கள் துண்டு பிரசுரம் வீடு வீடாக விநியோகிக்கும் போது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டோம்.
மீண்டும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சென்று இதைச் சொல்லி விண்ணப்பித்து பல நாட்கள் கழித்து எங்களுக்கு அனுமதி தந்தார்கள் அந்த அனுமதியிலும் காலை 8 மணிக்கு மேலும் மாலை 6 மணிவரை பிரசாரம் செய்யலாம் என்று அனுமதி தந்தார்கள்
அனைத்துக் கட்சிகளும் இரவு 9 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்யும் போது மக்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் எங்களுக்கு அனுமதி வழங்கியது எங்கள் பிரசாரத்தை முடக்குகின்ற செயலாக கருதுகிறோம்.
அதன் பின்பு அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க கோரி ஒரு விழிப்புணர்வு உண்ணாவிரதம் இருக்க தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கோரி இருந்தோம்.
ஆனால் காவல்துறை அனுமதிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி எங்களை அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
தேர்தல் நடக்கும் நேரத்தில் இது போன்ற விழிப்புணர்வு உண்ணாவிரதங்கள் நடத்தக் கூடாது என்று எந்த விதியிலும் இல்லை என்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் எங்களிடம் கருத்தை தெரிவித்து இருந்தார். அதனால் இந்த அனுமதி மறுப்பு ஜனநாயக உரிமையை பறிப்பதாக கருதுகிறோம்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கவில்லை என்பதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கிறது என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.
அதன் பின்பு ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்ற தலைப்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக மைக் செட் வாகன அனுமதி கேட்டிருந்தோம்.பல நாட்கள் எங்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்து விட்டு தொடர் முயற்சியின் பிறகு அனுமதி தந்தனர்.தேர்தல் முடியும் வரை அனுமதி வேண்டும் என்று கேட்டதற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர்.
தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்று கருதி தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய பணிகளை ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக நாங்கள் எங்களது சொந்த பொருளைசெலவழித்து பிரசாரம் செய்வதை கூட முழுமையாக அனுமதிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான கவலைப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.
தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டின் வலிமையை எடுத்து சொல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் இந்த தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
தேர்தல் நடத்தும் அதிகாரி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் நினைத்தாலும் நியாயமான தேர்தலை நடத்த முடியாது அவருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.
அதனால் வேறு மாநில தேர்தல் அதிகாரியை நியமித்து அவருக்கு தேவையான அதிகாரிகளையும் வேறு மாநிலத்தில் இருந்து நியமித்து நேர்மையான தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அவர்களை கேட்டுக் கொள்கின்றோம்
இந்த தேர்தலில் ஓட்டுக்கு பெருமளவு பணமும் பொருளும் கொடுக்க அதிமுக திமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் கொடுக்கப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தால் மட்டுமே தேர்தல் மீது நம்பிக்கை வரும்
தேர்தல் நடத்துவதை விட நியாயமான தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் கடமை என்று கருதுகிறோம். இந்தத் தேர்தலை உடனடியாக நடத்தி அறிவிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை எதுவும் இல்லை.
அதனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனில் தேர்தலை ரத்து செய்து முறைகேடான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும்
இந்திய அரசியலில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் இந்த தேர்தலை அதற்கான களமாக பயன்படுத்துங்கள். இந்த முறையும் தேர்தல் ஆணையம்வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு புகார்களை பதிவு செய்துவிட்டு முடிவுகளை அறிவித்துவிட்டு செல்லுமானால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று தேவையில்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமான மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற துணிச்சலான ஆணையமாக செயல்பட வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே ஈசுவரன் தெரிவித்துள்ளார்.