Close
நவம்பர் 22, 2024 11:30 காலை

கவிதைப் பக்கம்… வானொலி…

வானொலி..

மார்க்கோனி
கண்டெடுத்த மழலை
இதில்
மகிழாத
மயங்காத
மனிதரில்லை
என்பதை
மறுப்பதற்கில்லை!

அம்மா ஊட்டிய தமிழும்
அதில்
அமிழ்தமாய் சுரக்கும்
அப்பாவின்
திரு மந்திரங்களையும்
அன்றாடம் படிக்கும்
காற்றிலிருந்து
வார்த்தைகளை எடுக்கும்
காவியங்களை படைக்கும்
கானங்களையும் இசைக்கும்!!

தேர்வுமுடிவுகள்
தேர்தல் முடிவுகள்
வேளாண்மைச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
வியாபாரச் செய்திகளோடு
வேலைவாய்ப்புச் செய்திகளையும்
விலாவாரியாக
கொடுக்கும்

இன்னிசை இசைக்கும்
இடி ,மழையை அறிவிக்கும்
இலங்கைத் தமிழை
இறக்குமதி செய்துகொடுக்கும்
இங்கிலாந்திலிருந்து தமிழை-நடு
இரவிலும் எழுந்து படிக்கும்
இனிக்கும்!

அறிவியல் கருத்துக்கள்
ஆன்மீக நிகழ்வுகள்
அரசியல் சரத்துக்கள்
அயல்நாட்டின் உறவுகள்
அன்றாட நிகழ்வுகளையும்
தரும்
மனம்
ஆனந்த நிலையி்ல்
அமைதிபெறும்

முக்கிய தலைவர்களையும்
முகம் தெரியதவர்களையும்
வீட்டிற்கு அழைத்துவரும்
விளங்காத
விவரங்களை
உடன் தரும்

செவிக்கு உணவாக
இசைத் திரவியங்களை
தெரியாத மொழியிலும்
இசைக்கும்
தென்றலை போலவே
தேகத்தை தினம் நனைக்கும்!

பள பல ஆடை உடுத்தி
பதிவு நாடாவையும்
தன்னோடு கிடத்திய
வானொலிப்பெட்டி
படக்காட்சியையும்
தன்னுள் பற்றியிருந்தால்
மவுசு கூடியிருக்கும்
மக்கள் கூட்டம்
அதிகம்
தேடியிருக்கும்!

எல்லோர் வீட்டிலும் புகுந்து
எல்லோரோடும் கலந்து
மனதின் குரலாக
ஒலிக்கும்
கலையின் மொழி
கல்வியின் ஞான ஒலி…
என்றும்
வந்தே மாதரத்தில் தொடங்கி
வள்ளுவத்தில் முடியும்- நம்
வானொலி
வாழ்ந்துகொண்டே இருக்கும்!!!

##மரு.மு.பெரியசாமி ##
புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top