மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
மகா சிவராத்திரி என்பது, சிவனின் சிறந்த இரவு என்ற வகையில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும், மாசி மாத சிவராத்திரியில் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். இந்து சாஸ்திரங்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்கு, ஏற்ற நாளாக சிவராத்திரி உள்ளது.
ஆண்டு தோறும், குளிர்காலம் குறைந்து, வசந்த காலமும், கோடைகாலமும் துவங்கும் சமயத்தில் தமிழ் மாதமான மாசி மாதம் அமாவாசை நேரத்தில் மகா சிவராத்திரி வரும். இது, நம் வாழ்வில், இருளையும், அறியாமையையும் நீக்கி, வாழ்வில் புத்துயிர் பெற ஞான உணர்வை அருளும். பக்தர்கள் பலர் சிவாரத்திரி நாளில் இரவு முழுவதும், உறங்காமல் விடிய விடிய விரதமிருந்து, சிவனை மனமுருகி வழிபடுவர். சிவனின் திருநாமத்தைப் பாடி வழிபாடுவார்கள். அதேபோல், மாசிமாத தேய்ப்பிறை சதுர்த்தசி நாளே, மகா சிவராத்திரியாகும். சிவராத்திரி இரவில் சிவபெருமானை வணங்கினால், பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சனிக்கிழமை(பிப்-18) மாலை, 6 மணிக்கு துவங்கி மறுநாள் (பிப்-19) காலை 6 மணி வரை சிவன் கோயில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. அதற்காக, பக்தர்கள் இரவு முழுவதும் பல்வேறு சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடந்த நான்கு கால பூஜைகளில் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான நாமக்கல் சித்தர் மலை ஈஸ்வரன் கோவில்.
ஏகாம்பர ஈஸ்வரர் கோயில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், ப.வேலூர் மற்றும் பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயில், அ.வாழவந்தி ஈஸ்வரர் கோயில், வள்ளிபுரம் ஈஸ்வரர் கோயில், புத்தூர் ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் விடிய விடிய சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒவ்வொரு சிவாலயங்களிலும், நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டது. மோகனூர் மதுகரவேணி அம்பாள் சமேத அசலதீபேஸ்வரர் கோவிலில், இரவு 7 மணி, 10 மணி, அதிகாலை 1 மணி, 4 மணி என, நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு காலத்திற்கும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவராத்திரி விழாவில், மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.