உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழாவை முன்னிட்டு காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி பெருவிழா நேற்று(சனிக்கிழமை) நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஒரே நாளில் வந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
அதன்படி உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள் ,அரிசி மாவு , பொடி திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதையடுத்து சனிக்கிழமை மாலையில் தஞ்சாவூர் பெரிய கோவில் மகாசிவராத்திரி விழாவினை முன்னீட்டு திலகர் திடலில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழா கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (18.02.2023) குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் , மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் செல்வராஜ், சூரிய நாராயணன், புதுக்கோட்டை, தஞ்சை துணை ஆணையர் தி. அனிதா, மயிலாடுதுறை துணை ஆணையர் மோகனசுந்தரம், திருச்சி துணை ஆணையர் ஞானசேகரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான துணை ஆணையர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
முன்னதாக மாலையில் நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஒருவழி பாதையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
சிவன் ராத்திரியின் சிறப்புகள்..
சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும்.
நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.
உணவை தவிர்க்கும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிகஉயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.