புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான அறிவியல் பரிசோதனைகள் பயிற்சி முகாம் புதுக்கோட்டையிலுள்ள அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசியதாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்ற கருத்தாளர்கள் அட்டவணைகளை பின்பற்றி தினந்தோறும் அரசு பள்ளிகளில் அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டி வருகின்றனர். மாணவர்களிடம் கேள்வி கேட்டு சிந்தித்து புதுமையான வழிகளில் விடைகள் கண்டறிய உதவுவதாக கல்வித்துறை உயர் அலுவலர்கள் பாராட்டி வருகின்றனர் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் மாணிக்கத்தாய் கலந்து கொண்டு பேசியதாவது: அறிவியல் இயக்கத்தின் பல்வேறு குழுக்களான பிரசாரம், சூழலியல், கல்வி, சமம், ஆரோக்கியம், வெளியீடு உள்ளிட்ட குழுக்கள் சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
வானவில் மற்ற கருத்தாளர்கள் அறிவியல் தொடர்பான கருத்துகளை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும், அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளான யுரேகா, யுரேகா, துளிர், ஜந்தர் மந்தர், அறிவியல் பரிசோதனைகள் உள்ளிட்ட நூல்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும்.பெண்கள் ஆரோக்கியம், சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், ரா.ராமதிலகம் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.ஜெயபாலன் மா.குமரேசன், மாவட்ட இணைச் செயலாளர் ஆ.கமலம், சி.ஷோபா, கறம்பக்குடி ஒன்றிய அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் மு.சாமியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட இணைச் செயலாளர் சை.மஸ்தான் பகுருதீன், கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா ஆகியோர் கருத்தாளருக்கு பயிற்சியளித்தனர்.
கணிதம், இயற்பியல், பாட பரிசோதனைகளான வெப்பம், மந்திர முட்டை, வெப்பத்தினால் தண்ணீரின் மட்டம் மேலேறுதல், வெப்ப உணர்வு காற்றாடி, எத்தனை வடிவங்களை உருவாக்கலாம் உள்ளிட்ட சோதனைகளை செய்து காண்பித்தனர்.
கருத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக பெருளாளர் த.விமலா நன்றி கூறினார்.