நெல் கொள்முதலில் ஊழலுக்கு காரணமாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன் வரவேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெல் கொள்முதலில் அதிகாரிகளின் நடவடிக்கைகள்மூலம் ஊழலின் ஊற்றுக் கண் திறந்து விடப்படுகிறது. அடிமட்ட ஊழியர்கள் மீது அனைத்தையும் சுமத்தி விட்டு அதிகாரிகள் தப்பித்து கொள்கின்ற நிலைமைகளில் முதலமைச்சர் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.
நெல் கொள்முதலில் உள்ள ஊழல் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட உணவுத்துறை அமைச்சர் தஞ்சையில் ஆய்வு செய்தபின் ஒரு பைசா கூட விவசாயிக ளிடம் லஞ்சம் வாங்கக்ககூடாது , ஒரு பைசா கூட விவசாயி கள் லஞ்சமாக கொடுக்க கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டார்.
ஊழலுக்கு அடிமட்ட ஊழியர்கள் தான் காரணம் என்று அதற்கு மேல் உள்ள அனைவரும் தூய்மையானவர்கள் என்ற அடிப்படையில் 90 கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு எதிர்கால வாழ்க்கை பறிக்கப்பட்டுவிட்டது. இது விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும்.
ஆனால் ஊழலை களைவதற்கு எவ்விதத்திலும் உதவாது.நெல் கொள்முதல் பணியாளர்கள் பணியில் சேரும்போது சில ஆயிரம் சம்பளம் பெறுகின்ற ஊழியர்களிடம் எவ்வித விசாரணையும் செய்யாமல், இழப்பு ஏற்படுத்தியது நிரூபிக்கப்படாமல் லட்சகணக்கில் இழப்பு தொகை வசூலிக்கப்படுகிறது.
மண்டல உயர் அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து இயக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற் றாததால் கடந்த காலங்களில் பல நாட்கள் இருப்பு இருந்து பெரும் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் இது குறித்து அரசுக்கு உண்மை நிலையை விளக்கி அந்த இழப்பை ஏற்க செய்வதற்கு பதிலாக தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக அவர்களே முன்னின்று நெல் கொள்முதல் பணியாளர்களிடம் பணியில் சேரும்போதே லட்சக்கணக்கில் பிடித்தம் (ரெக்கவரி) வசூலிக்கின்றனர்.
மேற்கண்ட தொகையை செலுத்தினால்தான் மீண்டும் வேலை என்ற கட்டப்பஞ்சாயத்து முறையை கடைபிடிக்கின்றனர். இதனால் பணத்தை செலுத்தியவர்கள் இதனை ஈடுகட்ட விவசாயிகளிடம் கையேந்துகின்றனர். ஊழலின் ஊற்று கண்ணை அதிகாரிகளே திறந்து விடுகின்றனர்.
அதிகம் ரெக்கவரி வசூலித்த திருவாரூர் மாவட்டத்தில் தற்போது ஆயிரக்கணக்கான மூட்டைகள் வேறு இடங்களுக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏற்படுகின்ற இழப்பு செலுத்த அடுத்த ஆண்டு பணியில் சேர்வதற்கு நிபந்தனையாக்கப்படும். கொள் முதலில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நெல் கொள்முதல் பணியாளர்களிடம் முதுநிலை மண்டல மேலாளர்கள் 18 கோடி ரூபாய் வசூலித் திருக்கிறார்கள். இதற்கு எந்த விசாரணையும் கிடையாது,எந்த ஆணையும் இல்லை.
இவர்களுக்கு சட்டப்படியான உரிமையோ, அதிகாரமோ இல்லை. தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெருமளவிற்கு ஊழல் நடைபெறுவதற்கு இவர்கள் காரணமாக இருந்து வருகிறார்கள். இவர்களுடைய சட்ட விரோதமான கோடிக் கணக்கில் வசூலிக்கும் இந்த செயல் என்பது கடுமையான குற்றவியல் நடவடிக்கை ஆகும்.
எவ்வித விசாரணை செய்யாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் வசூலித்த மண்டல மேலாளர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் , நிர்வாகம் சட்டவிரோதமாக வசூலித்த பணத்தை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் திரும்ப வழங்க வேண்டும்.
பணியில் தவறிழைத்திருந்தால். உரிய விசாரணை செய்து,குற்றம் இழைத்தது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இழப்பு தொகை வசூலிக்கப் பட வேண்டும் என்ற இயற்கை நீதி கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
இதே போன்று ஊழலுக்கு முக்கிய பங்கு வகிக்கின்ற குறிப்பாக ஆயிரக்கணக்கில் லாரி மாமூல் மூட்டை ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத ஒப்பந்தமும்,ஆய்வு செய்ய வருகின்ற அதிகாரிகளை கவனிக்க வேண்டும் என்ற நடைமுறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஊழலுக்கு அடிப்படையான மேற்கண்ட முக்கிய பிரச்னைகள் அதிகாரிகளின் ஆதரவோடு தொடர்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அரசு முழுமையாக ஒழித்திட வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.