புதுக்கோட்டை மாவட்ட வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில், அரசு திட்டங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேற்று வழங்கினார்.
இம்முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறு தொழில் மானியக் கடன்கள், மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்கள், கல்விக்கடன்கள், வாகனக் கடன்கள், சாலையோர வியாபாரிகளுக்கான கடன்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல் திட்டத்திற்கான கடன்கள், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட கடன்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கடன்கள்.
மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கடன்கள், ஊரக வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கான தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 47 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இம்முகாம் மூலமாக வங்கி கடன் இணைப்புகளை பெற்ற அனைத்து நபர்களும் உரிய முறையில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் சங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) அ.முத்துரெத்தினம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் பிரசாந்த், ஊரக சுயவேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் கலைச்செல்வி மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.