சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு வுக்கு அனுப்பியுள்ள மனுவிவ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 18/01/2023-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதே நாளில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியான தங்களுக்கு தேர்தலில் ஓட்டுக்கு பணம் பொருள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி இருந்தேன்.அதன் பின்பு திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பணம் பொருள் கொடுப்பதற் கான பணிகளை தொடங்கி விட்டார்கள் என்றும், அதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 31/01/ 2023 ஆம் தேதி தங்களுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தேன்.
அதன் பின்பு வாக்காளர்களை பணம் கொடுத்து பல இடங்களில் அடைத்து வைத்து மிக மோசமான நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் வீடியோ ஆதாரங்களுடன் தங்களுக்கு அனுப்பி வைத்தேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஜனநாயக படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 20/02/2023 -ஆம் தேதி அன்று மனு தாக்கல் செய்தேன்.
நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் அளித்த மனுவின் அடிப்படையில் எனது மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அளித்த உறுதி மொழியை காப்பாற்றவில்லை.அதன் பிறகு 21/ 02 /2023 -ஆம் தேதி இரவு தொடங்கி 22/02/23 -ஆம் தேதி பகலிலும் கூட திமுக ஓட்டுக்கு 3000 அதிமுக ஓட்டுக்கு 2000 ரூபாயை வெளிப்படையாக வழங்கினார்கள்.
இது குறித்து 22/02/ 23 -ஆம் தேதி ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் நேரடியாக மனு அளித்தோம். தலைமை தேர்தல் அதிகாரிக்கும் இந்த மனுவை அனுப்பி வைத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊருக்கே தெரிந்த உண்மை தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியாமல் இருப்பது மிகவும் வியப்பளிக்கிறது..
அதன் பின்பு வெளிப்படையாக பத்திரிகைகளும் ஊடகங்களிலும் செய்தி வந்த பிறகும் கூட ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வெளிப்படையாக கொலுசு, காமாட்சி விளக்கு, வேட்டி, சேலை போன்ற பொருட்களை வழங்கி ஓட்டு போடுமாறு வற்புறுத்துகின்றனர்
பல இடங்களில் கடவுள் படங்களை வைத்து சத்தியம் வாங்கி பொருள்கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு வற்புறுத்துகின்றனர். இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கு பணம் பொருள் வெளிப்படையாக விநியோகத்ததில் ஒரு இடத்தில் கூட தேர்தல் ஆணையம் இதை தடுத்து பணம் பொருட்களை கைப்பற்றவில்லை. இது தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்களில் வரும் செய்திகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இயலாது என்று நீங்கள் பேசியது ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மேலும் ஊக்கமாக அமைந்துவிட்டது. அதனால் இந்த குற்றத்திற்கு நீங்களும் துணை போயிருக்கிறீர்கள்.ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து தேர்தலை இரத்து செய்ய வேண்டாம். ஆனால் அதைவைத்து விசாரணை மேற்கொண்டு நடைபெறும் குற்றத்தை தடுத்து நிறுத்த முடியும்.
நீங்கள் விசாரித்தால் எளிதாக ஆதாரங்களை திரட்டமுடியும்.அதைவைத்து குற்றவாளி வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யமுடியும் இப்படி தேர்தலை நடத்துவது தேர்தல் நடத்தாமல் இருப்பதைவிட மோசமான விளைவுகளை இந்திய ஜனநாயகத்தில் ஏற்படுத்திவிடும்.இப்படிப்பட்ட ஜனநாயக படுகொலை தேர்தலை நடத்துவது இந்திய அரசியல் அமைப்பை அடியோடு அழித்து நாசமாக்கிவிடும்.
இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது அரசியல் அமைப்பின் மீது இந்த தேசத்தின் மீது அக்கறை உள்ள யாராலும் இதை சகித்துக் கொண்டு இருக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். சாதாரணமான எங்களுக்கு இருக்கும் அக்கறைகூட தேர்தல் ஆணையத்திற்கு இல்லாதது வேதனை அளிக்கிறது.
இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க அரசியல் அமைப்பின் கண்ணியத்தை காக்க நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே ஈசுவரன் தெரிவித்துள்ளார்.