Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

சோழவந்தானில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம்

மதுரை

சோழவந்தானில் நடைபெற்ற கலை சங்கமம் விழாவில் கலைஞர்களுக்கு பரிசளித்த இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர்

சோழவந்தானில்  சார்பில் நடந்த கலை சங்கமம் நிகழ்ச்சியில்  பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவர்  நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வணிகவரி பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், நடைபெற்ற விழாவுக்கு,  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை வகித்தார்.

எம். ஆர். எம். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார். இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, தலைவர் வாகை சந்திரசேகர் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர், வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் பேரூராட்சி பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கலை பண்பாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் செயல் படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காகவும், தொன்மையும், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளை போற்றிப் பாதுகாக்கவும், தமிழக அரசால் 1955 -ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பெற்றது.

தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம், கலைமாமணி விருது வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்.

மாநிலங்களிடையே கலைக் குழுக்களைப் பரிமாற்றம் செய்தல்,இளம் கலைஞர்கள் ஊக்குவிக்கும் திட்டம், கிராமிய கலைஞர்கள் / கலைக்குழுக்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்கிட நிதியுதவி வழங்குதல், சிறந்த நாடகங்கள் உருவாக்கிட நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல்,சிறந்த நாட்டிய நாடகம் உருவாக்கிட நிதியுதவி வழங்குதல்,

அரும்பெரும் கலை நூல்களை வெளியிட நிதியுதவி வழங்குதல்,தொன்மையான கலை வடிவங்களை ஆவண மாக்குதல்,கலை விழாக்கள் நடத்துதல், புகழ் மிக்க கலைஞர் களுக்கு  பாரதி  மற்றும்  எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிலான விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல்  போன்ற கலைத்திட்டப் பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top