மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடுமின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் 66 வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் மணிமண்டபம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். திட்டத் தலைவர் அ.முபாரக் பாட்சா முன்னிலை வகித்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் 66 -ஆம் ஆண்டு அமைப்பு நாள் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் .
நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்த ராஜன், போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலா ளர் பி.அப்பாத்துரை, மின் வாரிய சங்க நிர்வாகிகள் எம்.சிவலிங்கம், கே.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மின்வாரிய பணியாளர்களுக்கு 1. 12. 2019 முதல் ஊதிய ஒப்பந்தம் பேசி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இது நாள் வரை பேச்சு வார்த்தை நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஒப்பந்தம் உடனடியாக பேசப்பட்டு நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்,.
மின்வாரிய பணியிடங்களில் அவுட்சோர்சிங், ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும் , மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வேலைப்பளு குறைக்கப்பட வேண்டும், கேங்மேன், பகுதி நேர பணியாளர் , ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கட வேண்டும், திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், அரசாணை எண் 100 -ன் படி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.