புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா மற்றும் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு திருவப்பூர் அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், கவிநாடு கிராமத்தாரர்கள் மற்றும் கவிநாடு ஆயகட்டுதாரர்கள் இணைந்து நடத்தப்படும் அறுபதாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா திருவப்பூர் கவிநாடு கண்மாயில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் போட்டியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (26.02.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அனைத்து மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டு உறுதிமொழியான, ‘எங்கள் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடி டவும், நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும், பேணிக் காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட் டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறுதீங்கும் நேராமல் விளையாடுவோம் என்றும் உளமாற உறுதிமொழி கூறுகிறோம் என்ற ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை, அனைத்து மாடுபிடி வீரர்களும் எடுத்துக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் 956 காளைகள் மற்றும் 299 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு காளைகளும் அதேபோன்று மாடுபிடி வீரர்களும் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதனை அடுத்து வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர்.
சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சிறிது நேரம் வாடிவாசல் நின்று போக்கு காட்டி சென்றது. இதனைக் கண்ட ஏராளமான பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப் படுத்தினர். நேர்த்திக் கடனுக்காக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் பரிசுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
மேலும் காளையின் உரிமையாளர்கள் கொண்டு வரும் பரிசுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு மாலை சுமார் நான்கு முடிவடைந்தது இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 52 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு திடலிலிருந்து அருகே உள்ள குளத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் தண்ணீருக்குள் சென்றதால் அதனை மீட்க மாட்டின் உரிமையாளர்களும் சென்றனர் அப்போது தண்ணீரில் காளைகளும் காளையின் உரிமையாளர்களும் மாட்டிக்கொண்டனர் இதனை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரண்டு காளைகளையும் மற்றும் நான்கு காளை மாடுகளையும் உயிரோடு மீட்டனர் அதில் ஒரு காளை மாடு மட்டும் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தது. அந்த காளை மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எஸ்.கே.மிட்டல் , இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் டாக்டர்.ஆயூப்கான், மாவட்ட வருவாய் அலுலவர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சம்பத், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் 190 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.