Close
நவம்பர் 25, 2024 11:01 காலை

திருவொற்றியூரில் மாசி பிரம்மோற்சவ திருவிழா…

சென்னை

வடசென்னை திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மகோத்ஸல கொடியேற்றம்

மாசி பிரம்மோற்சவ திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை  வடிவுடையம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

வடசென்னையின் முதன்மைப் பகுதியாக உள்ள திருவொற்றியூரில், வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் புரிகிறார். மேலும், நாள் தோறும், உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்க, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள் புரிகிறார்.

பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரிஸ்வரர் (சிவபெருமானின் முதல் வடிவம்) என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில், மூலவர் திருவாருர் தியாகேசரை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என அழைக்கப்படுகிறார்.

திருக்கோயில் அதன் பழமைத் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆலயத்திற்குள் நுழையும் போதே, தெய்வீகமயமான அமைதியான சூழல் நம்மை வரவேற்பதை உணர முடிகிறது. விநாயகர் சந்நிதியை அடையலாம். ஆனைமுகக் கடவுளைத் தரிசித்து, அம்மனுக்கு சார்த்த மாலையுடன் செல்லும் பக்தர்களுக்கு நின்றபடியே அருள் புரியும், கருணை ததும்பும் விழிகளுடன், அழகான தோற்றமும் உடைய, வடிவுடை அம்மனை மிக அருகாமையிலிருந்து, நமது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, தரிசனம் செய்யலாம். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

அங்கிருந்து, சில அடிகள் நடந்து செல்ல, தியாகராஜ சுவாமிகளையும் தரிசனம் செய்யலாம். பின்னர் ஆதிபுரீஸ்வரர் (சிவபெருமானின் முதல் வடிவம்) சந்நிதியை அடையலாம். இவரை, காரணி விடாங்கர் மற்றும் படம்பக்க நாதர் எனவும் அழைக்கின்றனர். ஆதிபுரீஸ்வரர் உள் பிரகாரத்தில், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், விஷ்ணு, ஆதி சங்கரர் மற்றும் வட்டப்பிறை அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கான 27 லிங்கங்கள் அமைந்துள்ளன. பக்தர்கள், அவரவர் நட்சத்திரங்களுக்கான லிங்கங்களை வணங்குகின்றனர்.

மேலும், வெளிப்பிரகாரத்தில், வளர் காளி, திறந்த வெளி ஆகாச லிங்கம், அண்ணாமலையார், நாகலிங்கம், பால சிவன், காளஹஸ்தீஸ்வரர், பைரவர் மற்றும் சுப்ரமண்யர் ஆகியோர் தனிச் சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.

தெப்பக்குளத்தை ஒட்டி, கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும், தல விருட்சமான மகிழம்பூ மரமும் அமைந்துள்ளது. இம்மரத்தினடியில் தான், நால்வரில் ஒருவரான சுந்தரர்க்கும், சங்கிலியாருக்கும் சிவபெருமானால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top