நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, செயலாளர் ஏ.ராமையன் ஆகியோர் பின்வரும் கோரிக்கைகளை வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 20 முதல் 60 ரூபாய் வரை பிடித்தம் செய்கின்றனர். இதனால், சாகுபடி செலவையே ஈடுகட்ட முடியாத விவசாயிகளுக்கு இது மேலும் நெருக்கடியைத் தருகிறது. எனவே, நெல்கொள் முதல் நிலையங்களில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில் பட்டியல் இன மக்கள் 42 பேருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பட்டா வழங்கப்பட்டது. இதனை உடனடியாக வருவாய்துறை கணக்கில் போக்குவரத்து செய்து அங்கு குடியிருந்து வரும் மக்களுக்கு குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
திருவரங்குளம் ஒன்றியம் வம்பன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் இடுபொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியில் வசிக்கும் வெள்ளைக்கண்ணு வீட்டில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யுள்ளனர்.