Close
நவம்பர் 25, 2024 12:36 காலை

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 21 ல் மாநில மாநாடு

தஞ்சாவூர்

தஞசையில் நடைபெற்ற ஏஐசியுசி போக்குவரத்து சம்மேளன கூட்டம்

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி  மார்ச் 21 தஞ்சாவூரில் ஏஐடியூசி போக்குவரத்து கழக ஓய்வூதியர் சம்மேளனத்தின் 3 -ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று தஞ்சாவூர் ஏஐடியூசி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பி.அப்பாத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் நடைபெற்ற பணிகள் குறித்தும், மார்ச் 21 தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு குறித்தும் விளக்கி பேசினார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் கே.நேருதுரை, துணை பொதுச்செயலாளர்கள் எம்.நாராயணசிங், எம்.சுப்பிரம ணியன், என்.முருகராஜ், நிர்வாகிகள் வை.மணவழகன், எம்.அன்பழகன், ஆர்.மாரிமுத்து, டி.மலைச்சாமி, ஏ.வனராஜ், ஏ.தவமணி, ஆர்.சம்பத்குமார், டி.தங்கராசு, டி.கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கும்பகோணம் ஓய்வூதியர் சங்க தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன்அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் துணைத் தலைவர் கே.சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 90 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர் .இவர்களில் பல ஆயிரம் ஓய்வூதியர்கள் எந்தவித ஓய்வூதிய உயர்வும், பலனும் அனுபவிக்காமல் இறந்து விட்டனர்.

தற்போது சுமார் 86 ஆயிரம் ஓய்வூதியர்களும், அவர்களின் பல லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர் . இவர்களின் பணிக்காலத்தில் நேரம் காலம் பார்க்காது, பசி தூக்கம் மறந்து பசிக்கின்ற பொழுது சாப்பிட முடியாத நிலைமையிலும், அவசர நிலைமையில் சிறுநீர் கழிக்க கூடாது நேரமின்றி,தனது உறவினர்கள், நண்பர்கள், சுப -துக்க காரியங்களுக்கு செல்லாது, குடும்பத்தை மறந்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து இன்றைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 50 ஆண்டு காலம் பொன் விழா முடிந்தும் சிறப்பான மக்கள் சேவையை செய்து வருவதற்கு அடித்தளமாக இருந்தவர்கள்.

அரசின் கொள்கை முடிவுகள், சமூக நீதி கோட்பாடுகள் ,கிராம பொருளாதாரம் வளர்ச்சி, மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்து சமூகம் சார்ந்த பணிகளிலும் தங்களை அர்ப்பணிப்புடன் இணைத்துக் கொண்டவர்கள்.

அகில இந்திய அளவில் போக்குவரத்து கழகங்களில் பயணிகள் ஏற்றி இறக்குவது, ஓடும் கிலோ மீட்டர் அதிகரித்து ஓட்டுவது , வருவாய் சேமிப்பு , எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்று தமிழ்நாடு அரசிற்கு பெருமை சேர்த்து வந்துள்ள தொழிலாளர்கள் தான் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஓய்வு பெற்ற பிறகு குடும்ப நிலைமைகள் மிகவும் துன்பகரமாக உள்ளது.

பணிக்காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்துவந்த. நிலையில், தற்போது ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி ,நரம்பு வியாதி, இருதய வியாதி, புற்றுநோயென பல்வேறு தொழில் வகை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதியர்களுக்கு , கடந்த 2008இல் தமிழ்நாடு அரசு நியமித்த பென்ஷன் சீரமைப்பு குழு பரிந்துரை அடிப்படையில் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பு ஏற்று வழங்க வேண்டும், திமுக தனது தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

அகவிலைப்படி உயர்வு வழக்கில் 2022 நவம்பர் மாதத்திற்கு அகவிலைப்படி உயர்வுகள் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பில் அரசும் ,கழக நிர்வாகமும் மேல் முறையீடு செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், அத்துடன் அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சேர்த்து வழங்க வேண்டும்,. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பேசப்படுகின்ற ஊதிய உயர்வு ஒப்பந்த பலன்கள் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். வாரிசு பணி ஆண்டு தோறும் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப் பட்டு ஆறு வருடங்கள் முடிந்தும் பணிநியமன ஆணை வழங்கப்பட வில்லை, உடனடியாக இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஓய்வூதியர்களுக்கு நடைமுறை உள்ள மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியர் இறந்து விட்டால் குடும்ப நல நிதி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் .

கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன் களை வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டு குளிர்சாதன வண்டி, இடைநிலை வண்டி உட்பட அனைத்து பேருந்துகளிலும் குடும்பத்துடன் இலவச பயணம் செய்ய அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளுக்கு மார்ச்சில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்வு காண வேண்டும்.

பல்வேறு சங்கங்களாக பிரிந்து இருக்கின்ற அனைத்து ஓய்வுதியர் நல சங்கங்களும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் என்ற அடிப்படையில் ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தஞ்சாவூரில் ஏஐடியூசி ஓய்வூதியர் சம்மேளனத்தின் 3 -ஆவது மாநில மாநாட்டை மார்ச் 21 -ஆம் தேதி தஞ்சாவூரில் நடத்துவது என ஒருமனதாக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top