புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக நிறுவன உதவியுடன் போஸ் அறிவியல் கழகம் மற்றும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 12-ஆவது தேசிய இயற்கை அறிவியல் கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
புஷ்கரம் கல்லூரி கூட்ட அரங்கில் நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். ரோலண்ட் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் கோமதி சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பழனி சஞ்சீவன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் இளையராஜா கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: அறிவியல் என்பது கணிதத்தின் வாயிலாகவே இயங்குகிறது. பொறியியல் அறிவியலின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு எஸ்.என்.போஸ், ஜே.சி.போஸ், சர்.சி.வி.ராமன், பி.சி.ராய் போன்ற விஞ்ஞானிகள் பல தியாகங்களை செய்துள்ளனர். மாணவர்கள் விவசாயத்துறையில் அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் அதற்கு தொடர்ந்து நல்ல நூல்களை படிப்பதும், சோதனைகளை கடந்து சாதனைகளை செய்வதும் முக்கியமாகும்.
போட்டி தேர்வுகளில் பங்கெடுக்க விரும்பும் மாணவர்கள் முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதியன கண்டுபிடிப்பில் இந்தியாவின் தரத்தை உயர்த்த மாணவர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கடலோர மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி டாக்டர் பிரின்ஸ் பிரகாஷ் ஜெபகுமார் சிறப்புரையாற்றினார்.
அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளைப் பாராட்டி போஸ் அறிவியல் கழகம் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னதாக புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வி.செல்லமுத்து வரவேற்றார். அறிவியல் கழக இயக்குனர் எஸ்.விஜிக்குமார் திட்ட முகவுரை ஆற்றினார். பேராசிரியர் லேகா பிரியங்கா நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சார்ந்த 20 உயர்மட்ட ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. 100 -க்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போஸ் அறிவியல் கழகத்துடன் இணைந்து புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.