Close
நவம்பர் 22, 2024 7:27 காலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாநிலை போராட்டம்

புதுக்கோட்டை

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணா நிலை போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

கோரிக்கைகள்: 

1.  01.04.2003 -க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடை முறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

2. 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது ஆறு மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது. ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் தமிழக அரசும் அறிவித்து நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.

3. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும்.

4. இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரி யர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

5. முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள். அரசுப் பணியாளர்கள். கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு (CAS) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

6. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள். பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

7. அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 8. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

9. 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

10.  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப் படுத்த வேண்டும். 11. உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.

12. அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும்.

13. 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

14. அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.

15. பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி, கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு – கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையில் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சே.ஜபருல்லா, இரா.ரெங்கசாமி,  த.ஜீவன்ராஜ், வி.எம்.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் கி.மகேந்திரன், உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.இராஜாங்கம் வரவேற்றார். நிர்வாகி  க.சு.செல்வராஜ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top