Close
நவம்பர் 22, 2024 6:29 மணி

வேகமாகப் பரவும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

தமிழ்நாடு

வேகமாகப் பரவும் மர்ம காய்ச்சல்

நாடு முழுவதும் வேகமாகப் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

தொடர் காய்ச்சல், நீடித்த இருமலுடன் கூடிய புதிய வகை வைரஸ் காய்ச்சல் நாடு முழுதும் பரவி வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘எச்.3 என்-2’ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள்.இதனால் மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இன்ப்ளுயன்சா எனப்படும் பரவக் கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசின் ஒரு பிரிவான, எச்3என்2′ வகை வைரஸ் பாதிப்பு தற்போது நாடு முழுதும் பரவி வருகிறது. மற்ற இன்ப்ளூயன்சா காய்ச்சல் போலல்லாமல், இந்த வைரசின் பாதிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு காய்ச்சல், நீடித்த இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

வழக்கமாக, பருவ காலம் மாறும்போது இது போன்ற காய்ச்சல் ஏற்படும்; 3 – 5 நாட்களுக்கு காய்ச்சலும், 2 – 3 வாரங்களுக்கு இருமலும் இருக்கும். ஆனால், தற்போது பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, முகக் கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிகளவில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது:வழக்கமாக பருவகாலம் மாறும்போது, காய்ச்சல் போன்றவை ஏற்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள நோயாளிகளில், 62 சதவீதம் பேருக்கு காய்ச்சல் உள்ளது. 86 சதவீதம் பேருக்கு இருமலும், 27 சதவீதம் பேருக்கு மூச்சுத் திணறலும் உள்ளன. இதைத் தவிர, 16 சதவீதம் பேருக்கு சளி, 16 சதவீதம் பேருக்கு நிமோனியா மற்றும் 6 சதவீதம் பேருக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டு உள்ளன.

மேலும், 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு உள்ளது. இதைத் தவிர, 7 சதவீதம் பேர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நிலைக்கு பாதிப்பு உள்ளது.இந்த வைரசால் உயிரிழக்கும் அபாயம் இல்லை. அதே நேரத்தில் நோய் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய வாய்ப்புள்ள குழந்தைகள், முதியோர், மற்ற தீவிர நோயுள்ளோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top