Close
நவம்பர் 22, 2024 4:09 காலை

புதுக்கோட்டையில் தனியார்துறை சார்பில் மார்ச் 11 ல் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை

மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தவுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்விதலைமையில் (6.3.2023) நடைபெற்றது.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11.03.2023 (சனிக்கிழமை) காலை 8  மணி முதல் நடைபெற வுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் பொது மக்களிடையே இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், ஒலி, ஒளி விளம்பரங்கள் மற்றும் ஊடகத்தின் வாயிலாகவும் விளம்பரப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் அதிக அளவில் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் கல்லூரிகள் மூலமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று தனியார்துறை மூலமாக வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திருமதி.மா.செல்வி அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ.வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top