Close
நவம்பர் 25, 2024 4:20 காலை

அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பணி நீக்கம்… மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பணி நீக்கத்தில் மதுரை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை கண்டித்து தஞ்சையில் மக்கள் அதிகாரம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் உரிய தகுதியுடன் நியமிக்கப்பட்ட, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர்கள் பணி நீக்கத்தில், மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பால் பிராமணர்  இல்லை என்ற மனுநீதி தீர்ப்பை அளித்து , பணி நீக்கத்தை உறுதி செய்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக   தஞ்சாவூர் ரயிலடி முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் தஞ்சை மாவட்ட பொருளாளர் அருள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் காளியப்பன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ் கடந்த 2021 தமிழக அரசு 24 பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை அறநிலையத்துறை ஆலயங்களில் நியமித்து ஒரு வரலாற்று சாதனை படைத்தது.

ஆனால் இந்த நியமனங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை நியமித்தது சட்ட விரோதம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, தமிழக அரசின் நியமனங்களை ரத்து செய்து இருக்கிறது.

குறிப்பாக திருச்சி குமாரவேலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்ட மூன்று அர்ச்சகர்களில் ஒரு பார்ப்பன அர்ச்சகரை தவிர பிற இரண்டு  பிராமணர் அல்லாத வர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு அடிப்படையில் அரசியல் சட்டம்,. அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது,. அரசியல் சட்டம் தீண்டாமையை ஒழித்தது மட்டுமல்லாது எந்த வடிவத்திலும் தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தி இருந்தபோதிலும், அதற்கு எதிரான ஒரு தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இதற்கு முன்னும் பல்வேறு அரசியல் சட்ட அமர்வுகளில் உச்ச நீதிமன்றம் தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப் படுத்த முடியாது என தெளிவாக தீர்ப்பளித்து இருந்த போதிலும், மதுரை உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, ஆகவே இது மனு நீதியை நீதிமன்றமே அமல்படுத்துகின்ற ஒரு சனாதன தீர்ப்பாகும்.

எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் பொது கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சக ராக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார் அவர்.

இதில்,  மக்கள் அதிகாரத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலா ளர் காவிரிநாடன், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சண்முகசுந்தரம்,. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணை பொது செயலாளர் செயலாளர் ராவணன்,  நிர்வாகிகள் எழுத்தாளர் சாம்பான்.

திருவாரூர் பக்ரிதாஸ், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், ஆதித்தமிழர் பேரவை இளைஞர் மன்ற மாநகர செயலாளர் வ.பிரேம்குமார் நிவாஸ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் லெட்சுமணன், தாமஸ், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top