Close
நவம்பர் 22, 2024 6:29 காலை

கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்… அயோத்தி..

அயலகத்தமிழர்கள்

அயோத்தி - திரைப்படம்

அண்மையில் வெளி வந்த அயோத்தி படம் எப்படி முடிய வேண்டும் என்பதை, கதை நகர்கிற போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு துளிர்விட ஆரம்பிக்கிறது. பொதுவாக சினிமா ரசிகனான ஒவ்வொருவருக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

நிச்சயமாக ஒரு படம் துவங்கும் பொழுது அதன் கதை திரைக்கதை எல்லாம் வைத்து மட்டுமே ஒரு படத்தின் இறுதி பகுதியை எழுதமுடியும்.இதை ஒரு இயக்குனர் எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்கலாம் அல்லது திரைப்பட உருவாக்கத்தின் போது முடிவு செய்யலாம். அது அவருடைய
சுய சிந்தனைக்குட்பட்டது.

ஒரு படம் சுபமாக முடிவதும் சோகமாக முடிவதும் அதன் கதை மற்றும் திரைக்கதையை பொறுத்து மட்டுமே. அந்த வகையில் அயோத்தி திரைப்படத்தின் திரைக்கதை, சோகத்துடன் நகர்த்தி சந்தோஷத்துடன் முடிக்கப்பட்டிருக்கிறது.

என்னை பொருத்தவரை இந்த படம், தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்து விட கூடாது. ஒருவேளை இதில் வன்மம், வன்முறை, குத்தாட்டம், குலுக்கல் ஆட்டம், இன்னும் பிற கேளிக்கை இத்தியாதிகள் இல்லாததால் மக்கள் மறந்து விடுவார்களோ

ஒரு நல்ல திரைப்படம் ஏதேனும் அறநெறியுள்ள கருத்துகளை
கொண்டிருக்கவேண்டும். குறைந்தது ஒரு மனித உணர்ச்சி யை கொண்டிருக்க வேண்டும். பாசம், அன்பு, மனிதம் என்று ஏதேனும் ஒரு உணர்ச்சி, எந்த இடத்திலும் சலிப்படைய செய்யாத திரைக்கதை, தர்க்க ரீதியிலான மீறல்கள் இல்லாத இயல்பான இயக்கம், குறிப்பாக எந்த இடத்திலும் மதம், இனம், மொழி, பெண்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று யாரையும்
காயப்படுத்தாத கதை, மேலும் மனித வாழ்விற்கு உதவுகிற சித்தாந்த சிந்தனைகொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் இயக்குனர் மந்திர மூர்த்திக்கு இந்த ஒரு படமே போதும் – அவ்வளவு நேர்த்தி.

பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் இருந்தாலும், மனித இனத்தில் மட்டுமே நாம் இருக்க விழைகின்றோம். மனித இனத்தில் இருப்பவர் அனைவருமே மனிதத்துடன் இயங்குவதில்லை.

பிரிவினையை வளர்த்து நல்லிணக்கத்தை நசுக்கி விட்டது இந்த சமூகம். எரிகிற தீயில் எண்ணெய் வார்க்காமல் இருப்பதற்கும், கொதிக்கிற நிலையில், எரிவதை நிறுத்துவதற்குமான சமூக பொறுப்பு ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இருக்கிறது. குறிப்பாக பொதுவெளியில் இயங்கும் ஊடகபடைப்பாளிகளுக்கு சற்று கூடுதலாக இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து இந்த திரைப்பட குழு, ஒரு தரமான படத்தை தந்திருக்கிறது.

அயோத்தி திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் எவையும் எதிர்மறை சிந்தனையுடன் படைக்கப்படவில்லை. சின்ன சின்ன பாத்திரங்களை ஏற்று, சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும், நம் மனதில் நீண்ட நெடிய நேரம் நிற்கிறார்கள் அந்த கதை மாந்தர்கள்.

தனது மோட்டார் சைக்கிளை விற்கும் நண்பன், தனது அலுவல்களை தாண்டி, வெளியில் வந்து பயணிகளிடம் பேசுகிற விமான நிலைய மேலாளர், தங்களது விமான பயணத்தை தள்ளிப் போட்டு, பயணச்சீட்டை தந்து உதவுகிற வயதான தம்பதிகள்.. இப்படி படம் நெடுக நம்மை பாதிக்கும் பாத்திரங்கள் பல.

கத்தி இல்லை, கத்தி பேசும் வசனங்கள் இல்லை ரத்தம் இல்லை, சத்தம் இல்லை, வன்மம் இல்லை, வன்முறை இல்லை…. இப்படி பல “இல்லைகள்” இருந்தாலும் மனிதம் மட்டும் படம் முழுக்க இழையோடி இருக்கிற காட்சிகள் இல்லாமல் இல்லை.
படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து, செயற்கை அரங்கம் அமைத்து… படம் எடுத்து முடித்த பிறகு, அதை பயனில்லாமல் ஆக்குகிற பிரம்மாண்ட படைப்புகளுக்கு மத்தியில், அதிக பொருட்செலவு இல்லாமல் இயல்பாக எடுக்கப்பட்ட மனிதம் பேசும் + அறம் பேசும் அற்புத படைப்பு = அயோத்தி.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top