Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுத்தக் கூடாது

புதுக்கோட்டை

வேங்கைவயலில் மக்களைச் சந்தித்த சிபிஎம் நிர்வாகி டில்லி பாபு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுதக்கூடாது என்றார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு.

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு  கலந்த சம்பவம் தொடர்பாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று பி.டில்லிபாபு ஆய்வு நடத்தினார்.

பின்னர்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகியும் குற்றவாளிகள் இதுநாள்வரை கைதுசெய்யப்படவில்லை. குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை என்ற பெயரில், அவர்களை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும்கூட வேங்கைவயல் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மயானத்திற்குக்கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மிகவம் பழுதடைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் மிகவும் சேதடைந்துள்ளது. இவைகளை உடனடியாக அரசு சரிசெய்ய வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு மீண்டும் தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொதுவான குடிநீர் இணைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு அதுவே வழிவகுக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமூகத்தில் வலம்வர உரிய நடவடிகைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top