லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மனுதாரரின் புகார் மனுவை புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டு மென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: அதில், நான் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் 19 -ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் பிரவினா மேரி மேற்கொண்ட சாலை ஆய்வின் போது, அவர் கேட்ட ரூபாய் 5000 லஞ்சத்தொகையை தர மறுத்ததால், லாரியில் 3 யூனிட் எம்.சாண்ட் கடத்தியதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வழக்கில் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
லாரியில் முறையாக அனுமதி பெற்று எம்.சாண்ட் மணலை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், லஞ்சம் கொடுக்க மறுத்ததால் முறையாக ஆவணங்கள் இல்லை எனக் கூறி திருமயம் வட்டாட்சியர் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தார். மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
இதனால், காயமடைந்த ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .கீழமை நீதிமன்றத்தில் ஓட்டுநருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை திரும்ப எடுக்கும்போது லாரி மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. லாரியை சரி செய்ய ரூ 1.5 லட்சம் செலவு செய்துள்ளேன்.
எனவே, லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாசில்தார் பிரவினா மேரி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உள்பட்டு பரிசீலனை செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.