Close
நவம்பர் 25, 2024 6:12 காலை

கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி ஏப்11 ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்

கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க, தமிழ்நாடு அரசு உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 -ல் இந்து அறநிலைய ஆலயங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

தஞ்சாவூரில் நடைபெற்ற கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஏஐ டியூசி அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வி.சு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கோயில் மனை குடியிருப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஏழுமலை நன்றி கூறினார் .

கூட்டத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் மனைகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வருபவர்கள் கோயிலுக்குரிய இடத்தின் அடிமனைக்கு ஆண்டுதோறும் வரி செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் தண்ணீர் வரி, சொத்து வரி , மின் கட்டணம் முதற் கொண்டு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அறநிலை யத்துறை அதிகாரிகள் குடியிருந்து வரும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றும், பூட்டி சீல் வைக்கும் அடாவடித்தனத்தை யும் செய்து‌ அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.

கோயில் மனைகளில் பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வழங்க வேண்டி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை, இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர் .

இந்த நிலையில் இந்து அறநிலையத் அதிகாரிகள் மக்கள் வசிக்கும் இடங்களை ஆக்கிரமித்தும், வீடுகளை விட்டு வெளியேற்றுவது, பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர், அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது நாள் வரைஇப்பிரச்னை களில் தீர்வு காணபடவில்லை.

எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்க தமிழ்நாடு அரசு டிரிப்யூனல் அல்லது உயர் மட்ட குழு ஒன்றை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து அந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 11 -ஆம் தேதி இந்து அறநிலைத்துறை ஆலயங்கள் , கோயில்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கோயில் மனைகளில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களும் பட்டா கிடைக்க தமிழ்நாடு முழுவதும் கோயில் நுழைவாயில்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றி பெறச் செய்ய அனைவரும்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top