Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

சுயமரியாதையுடன் வாழவும் சமூக அநீதிகளை எதிர்த்து போராடவும் கல்வி அறிவு மிகவும் அவசியம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற கலை இலக்கிய பெருமன்ற மகளிர் நாள் விழாவில் பேசுகிறார், மாநில குழு உறுப்பினரும்,. தஞ்சாவூர் மாநகர தலைவரும் , எழுத்தாளருமான முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி

சுயமரியாதையுடன் வாழவும் சமூக அநீதிகளை எதிர்த்து போராடவும் கல்வி அறிவு மிகவும் அவசியம்  என்றார்  எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி.

தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் தஞ்சை மாநகர கிளை சார்பில் மகளிர் தின விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது .

தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாநில குழு உறுப்பினரும், தஞ்சாவூர் மாநகர தலைவரும் எழுத்தாளரு மான முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி மேலும் பேசியதாவது:

இன்றைக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை மாணவ,மாணவியர்கள் கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஏழ்மை நிலமையில் இருந்தும் படிப்பில் முன்னேறி வருகின்றனர்.  ஆனால் விஞ்ஞான காலகட்டத்தில் அவர்களுக்கு உரிய சமூக அறிவு , திறமைகள் உயர் கல்வி அறிவுகள் முறையாக வழிகாட்டப்படவில்லை.

மாணவ, மாணவிகள் சுயமரியாதையுடன் வாழவும், சமூக அநீதிகளையும் எதிர்த்து போராடவும் கல்வி அறிவு மிக ,மிக அவசியம், கல்வி அறிவுடன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சொந்த திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் நம்மை ஒழுங்கு படுத்திக் கொண்டு, சமூக சீரழிவையும் ஒழுங்குபடுத்த முடியும்.

தமிழ் பண்பாடு, கலாசாரத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பல்வேறு திறமைகள் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன . இது ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து சமகால பெண்ணுரிமை உண்மையா? மாயையா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் சமகால பெண்ணுரிமை உண்மையே… என்ற அணியில் தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலை தமிழ் இலக்கியத்துறை மாணவர் ச.வாசுதேவன், மருதுபாண்டியர் கல்லூரி ஆடை வடிவமைப்பு இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி அ.யமுனா, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ் இலக்கிய மூன்றாம் ஆண்டு மாணவர் வீ.செல்லையா ஆகியோர் பேசினர்.

சமகால பெண்ணுரிமை மாயையே.. என்ற  அணியில் தஞ்சாவூர் உமா மகேஸ்வரனார், கலைக்கல்லூரி முதுகலை தமிழ் மாணவர் ஜோ.வியானி விஸ்வா , கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி முதுகலை கணித மாணவி த.வீரச்செல்வி, புனல்குளம் குயின்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரி இளங்கலை தமிழ் மாணவி க.முத்தமிழ்செல்வி ஆகியோர் பேசினர். வழக்கறிஞர் ச.ஜெயந்தி பட்டிமன்றத்திற்கு தலைமை வகித்தார்.

ஏ 4 தாளில் ஒரே பக்கத்தில் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க 135 தமிழக கோயில்களை வரைந்து சாதனை படைத்த மருது பாண்டியர் கல்லூரி மாணவி யமுனா, பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய முதுகலை மாணவி மாலினி ஆகியோருக்கு  பரிசளிக்கப்பட்டது.

முடிவில் கரந்தை தமிழ்வேல் கலைக் கல்லூரி உதவி பேராசிரியை முனைவர் ச.கிருத்திகா நன்றி கூறினார். நிகழ்வை, மருது பாண்டியர் கலைக் கல்லூரி முனைவர் சங்கீதா சரவணன் தொகுத்து வழங்கினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top