Close
நவம்பர் 22, 2024 10:57 காலை

பூத்தன மஞ்சள் வண்ண மலர்கள் … தொடங்கியது வசந்தகாலம்…

இங்கிலாந்து

இங்கிலாந்தில் தொடங்கிய வசந்த காலம்

இங்கிலாந்தில் வசந்த காலம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. மஞ்சள் வண்ண டஃபோடில் எங்கும் மலர்ந்து காணப்படுகிறது.நடைபயிற்சியின் போது, சாலையோரத்தில் பூத்த மலர்களை, பதிவு செய்த போது கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் நினைவுக்கு வந்தார்.

பிற கவிஞர்களால் அதிகம் பதிவுசெய்யப்படாத, அடித்தட்டு மக்களையும், தங்க இடமின்றித் திரிவோரையும், உழவர் பெருமக்களையும்,சிறு வணிகர்களையும் பாடுபொருளாக்கிப் பெருமை சேர்த்தவர் வேர்ட்ஸ்வொர்த்.

இயற்கை அன்னையின் மீது தணியாத காதல் கொண்ட வேர்ட்ஸ்வொர்த்தை, பிரிட்டனில் ஆங்கில காதல் இயக்கத்தில் முதல்வர் என்று சொல்வார்கள்.அவரின் புகழ்பெற்ற டஃபோடில் கவிதையை இந்த தருணத்தில், இந்த வருடத்தின் வசந்த காலத்தின் தொடக்கத்தில் நினைவு கூற முடிந்தது.

வேர்ட்ஸ்வொர்த் அவரது சகோதரர் இறந்துவிட்ட பிறகு, தான் ஒரு தனித்தீவில் விடப்பட்டது போல, தன்னை ஒருபள்ளத் தாக்கில் மிதக்கும் மேகம் போல தனிமையாக, சோகமாக உணர்கிறார். அவர் நடந்து செல்கையில் ஏரியின் அருகே மரங்களின் அடியில் மஞ்சள் டஃபோடிலேஸ்களை எதிர்கொள் கிறார். அடிக்கும் தென்றல் காற்றால் அவை அங்கும் இங்கும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றன.

வசந்த காலத்தில் டஃபோடில்ஸ் எவ்வளவு ஆச்சரியமாக இருந்தது என்பதை, இரவு வானத்தில் பிரகாசித்து மின்னும், நட்சத்திரங்களைப் போன்ற பூக்களாக விவரிக்கிறார். அவை தலை அசைத்து நடனமாடிக்கொண்டிருக்கின்றன. இந்த அழகான பூக்கள் ஒரு போதும் முடிவில்லாத வரிசையில் நிற்பதாக வேர்ட்ஸ்வொர்த் வெளிப்படுத்தி, பத்தாயிரம் பூக்களை முழுவதுமாக, ஒரே பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மாயையை உணர்வதாகவும் சொல்கிறார்.

பூக்களுடன் சேர்ந்து, ஏரியின் நீரும் எப்படி நகர்ந்தது, அவையிரண்டும் நடனத்தில் எப்படி போட்டிபோட்டுக் கொண்டன என்பதை சிலாகித்து சொல்கிறார். ஆனால் அங்கே மகிழ்ச்சியான பூக்கள் வென்றது, வண்ணமயமான ஏரி இழந்தது. அவர்களின் விளையாட்டுத்தனத்தைக் கண்டறிந்து, அதில் தன்னை இணைத்து கொள்ள முடியாமல் இருக்க திணறுகிறார்.

அவரது சோகமான மனநிலை எவ்வாறு மகிழ்ச்சியாக மாறியது என்று யோசித்துக்கொண்டே ஆசிரியர் பூக்களையும் ஏரியையும், ஏற இறங்க பார்த்துக்கொண்டே இருந்தார்.
டாஃபோடில்களின் நடனம் அவருக்கு மறுக்க முடியாத ஒரு செல்வத்தை வழங்கின. மயக்கும் அந்த பூக்கள், அவரது இதயத்தில் எப்படி ஒரு இடம் பெற்றன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை., ஆனால் உணர முடிந்தது.

அன்றைய நாளில் டாஃபோடில்ஸ் நடனமாடுவதைப் பார்த்தபின் ஆசிரியர் என்ன இன்பம் பெற்றார் என்பதை அன்றே வரிகளாக வடித்தார்.

வேர்ட்ஸ்வொர்த் சோகமாகவோ அல்லது தனியாகவோ உணர்ந்த போதெல்லாம், நடனமாடும் டஃபோடில்ஸின் பிம்பம் அவரது நினைவுக்கு வந்தது, அவர் வாழ்க்கையின்

புதையலை மீண்டும் பெற்றது போல இருந்தது என்கிறார். தனிமை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை உணர்ந்த அவர், இறுதியாக டாஃபோடில்ஸின் நடனத்தில், இரண்டற சேருவதில் அவரது இதயம் திருப்தி அடைந்ததாக முடிக்கிறார் அந்த கவிதையை..

இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top